முகம்மது சதக் பாலிடெக்னியில் 2026 ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா…!

கீழக்கரை, ஜூலை.05:-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி முதல்வர் சேக் தாவூது தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தனது தலைமை உரையில் மாணவர்கள் தற்போதைய சவால்களை எதிர் நோக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் , முயற்சியை வித்திட்டு பயிற்சியை மேற்கொண்டு வெற்றிகளைப் பெற வேண்டும் என்று பேசினார்.
புதிதாக சேர்ந்துள்ள சுமார் 200 மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சியை சேர்ந்த கலைச்சுடர் மணி, இன்னிசை வேந்தர் வாசு கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, திறமைகளை வெளிப்படுத்தி ,கல்வி மற்றும் கலைகளில் சிறப்பாக வர வேண்டும் என்று நகைச்சுவையோடு கூறினார்.


இவ்விழாவில் கௌரவ விருந்தினராக பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்,
மனிதவள மற்றும் மின் திறன்கள் பயிற்றுநர், மற்றும் ராமநாதபுரம் ஆர்.கே இன்போடெக் உரிமையாளருமான ராம்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவர்கள் கல்வியை ஆர்வத்துடன், மன அழுத்தம் இன்றி கற்க வேண்டும் என்றும், படிக்கும் காலத்திலேயே பல மென்திறன்களை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றும் பேசினார்.
இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கீழக்கரை வட்டாட்சியருமான ராமசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:-
தான் கடந்து வந்த பாதைகள் , ஏற்பட்ட இன்னல்கள், ஒரு சாதாரண மாணவனாக இருந்து போராடி பெற்ற வெற்றிகள் மூலம் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் , இன்றைய மாணவர்கள் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு இன்னும் உயர்வான நிலைக்கு வர வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர், சவுதி அரேபியாவில் இறால் நிறுவன பராமரிப்பு பணியில் உதவி மேலாளர் சையது காசிம் விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாணவர்கள் தங்கள் இலக்குகளை தெளிவாகத் தீர்மானித்து, அதனை நோக்கி பயணித்து, கல்வியை முழுமையாகப் பயின்று, நம்பிக்கை உடன் வருங்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் கணேஷ்குமார் மற்றும் துறைத் தலைவர்கள் அனைவரும் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் இயற்பியல் துறை விரிவுரையாளர் இளமுருகு வரவேற்க, விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறைத்தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



