ராமநாதபுரம் அருகே பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் 3 ஆண்டுகளாக பணி முடிக்கப்படாத அவலம்-கட்டி முடிக்கப்படாத வீட்டிற்கு பணம் பெற்ற ஒப்பந்தததாரரால் துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள உலையூர் கிராமத்தில் வசித்து வரும் மல்லிகா மற்றும் துப்புரவு பணியாளர்களான லட்சுமி,சுமதி ஆகிய 3 பேருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்படைத்துள்ளனர்.ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு முழுமை அடையாமல்,வீட்டின் மேற்கூரை கான்கிரீட் அமைக்காமல் ஒப்பந்ததாரர் துப்புரவு பணியாளர்களை மிரட்டி பணம் வாங்கி சென்றதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் துப்புரவு பணியாளர்களான லட்சுமி சுமதி ஆகிய இருவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.லட்சுமி என்பவர் வீடு இல்லாததால் அருகில் சிறிய தகரத்தினால் கொட்டகை அமைத்து அதில் சமைத்து தங்கி வருவதாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
வீட்டில் முழுமையாக கட்டுமான பணி மேற்கொள்ள முடியாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு துப்புரவு பணியாளர்களின் வீடுகளை முறையாக கட்டி அவர்களிடம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதையிடம் கேட்ட பொழுது இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



