தமிழகம்

ராமநாதபுரம் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர்..!

ராமநாதபுரம், ஜூலை.12:-

தமிழக வெற்றிக்கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவர் ஜெயபாலாவின் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் அட்ராசிட்டி குறித்து “காலை அஞ்சல்” நாளிதழில் செய்தி வெளியிட்டதற்காக தனது ஆதரவாளரான கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரை வைத்து ஆசிரியரை மிரட்டியுள்ளது தற்போது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப் பெரும்பான்மையுடன் உருவெடுத்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கான அரசாக உருவெடுத்தது. அதனைத்தொடர்ந்து முதல்வர் ச.ஜோசப் விஜய் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பம்பரமாக சுழன்று வருகின்றார்.குறிப்பாக கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஊழல் என்பதே இல்லாத அளவுக்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரது நோக்கத்தை சிதைக்கும் வகையில் தனது கணவரின் கைப்பாவையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிசாம்ராஜ்யம் நடத்தி வரும் தவெக மாவட்ட செயலாளர் மலர்விழி குறித்தும் அவரை முன்னின்று இயக்குபவராக அனைவராலும் அறியப்படும் ஜெயபாலா ஆகியோர் குறித்து பல்வேறு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தலைமை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவர் ஜெயபாலாவின் அட்ராசிட்டிகளை ஊக்கு விப்பதாகவே பார்க்க முடிகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

R.S.மடை நாகேந்திரன்

மேலும் மாவட்ட செயலாளர் மலர்விழி என்றாலும் அவருடைய கணவர் ஜெயபாலா கட்சி நிர்வாகத்தில் தலையிட்டு தனக்கு வேண்டப் பட்டவர்களை மட்டும் கையில் வைத்து கொண்டு தங்களது தனி சாம்ராஜ்யம் குறித்து யாராவது ஒரு பத்திரிக்கையாளர்கள் விமர்ச்சிக்கும் போது ஆதரவாளர்களை கூலிப் படையாக மாற்றி பத்திரிக்கை யாளர்களை மிரட்டி வரும் அவலநிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை யெல்லாம் பார்த்தால் மக்கள் விரும்பிய மாற்றம் இன்னும் உதயமாகவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழிக்கேற்ப கடந்த காலங்களில் ஆண்ட திராவிட கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் எப்படி இருந்ததோ அதே அவலநிலைதான் இன்று வரை தொடர்கிறது. இதில் கேவலம் என்னவென்றால் மாவட்ட செயலாளரின் கணவர் ஒரு அரசு ஊழியர் அவர் ஏன் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என ஆசிரியரை மிரட்டிய கூலிப்படையைச் சேர்ந்தவர் கேட்க தன்னை அப்படி கேட்க சொன்ன ஜெயபாலாவை முந்தைய திமுக அரசு சஸ்பெண்ட் செய்து விரட்டி விட்டதை மறந்து விட்டார் போல.

மேலும் அப்படியே அவர் அரசு பணியில் தற்சமயம் பணியாற்றினாலும் கட்சியில் பொறுப்பு வகிக்க முடியாது. கட்சியில் என்ன பொறுப்பென்றே தெரியாத ஜெயபாலா கட்சி மற்றும் அரசு பணியில் இருந்தாலும் அரசு நிகழ்ச்சி மேடைகளில் நிற்க கூட கூடாது இதுதான் இந்திய அரசியலமைப்பின் விதி. இது கூட தெரியாமல் மக்கள் பிரதிநிதியாக ஏன் கட்சியில் கூட எந்த பொறுப்பும் வகிக்காத ஜெயபாலா இவ்வாறு நடந்து கொள்வது உண்மையில் வெட்கக்கேடான செயலாகும். ராமநாதபுரத்திற்கு என் மனைவி மாவட்ட செயலாளராக இருக்கும் வரை நான் வைத்ததுதான் சட்டம் என சபதமேற்று சிட்டிங் மந்திரி ராஜீவ்வை கூட தனது கூலிப்படைகள் மூலம் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறாராம் ஜெயபாலா.

கட்சி விவகாரங்கள், உள்ளூர் அரசு சார்ந்த டெண்டர் மற்றும் இன்ன பிற வேலைகளிலும் மூக்கை நுழைத்து ஏகத்துக்கும் லஞ்சம் கேட்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. எது எப்படியோ தயிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் பேராதரவால் தூய ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்யின் ஆட்சிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அவப்பெயர் ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்ட மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவர் ஜெயபாலாவை தலைமையும் கண்டிக்க முடியாத சூழலில் இருப்பதாகவே ஊர்ஜிதமாகிறது.

மக்களால் வளர்ந்த கட்சிக்கும், அவர்களது ஏகோபித்த ஆதரவால் அமைந்த ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாவட்ட செயலாளரின் கணவர் ஜெயபாலா மீதும், அவரது கைப்பாவையாக செயல்படும் மாவட்ட செயலாளர் மலர்விழி மீதும் தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ச.ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுத்து இது மக்களுக்கான சமூகநீதியுடன் கூடிய தூய ஆட்சி என்பதை நிருபணம் செய்ய முன்வர வேண்டும்.

நிழல் மாவட்ட செயலாளர் ஜெயபாலாவிற்கு…!

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பெ.மதன்ராஜ் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவர் ஜெயபாலா அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது பின்னால் கையை கட்டிக்கொண்டு நிற்பது போல புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் “காலை அஞ்சல்” நாளிதழ் மற்றும் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டதற்கு ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த கூலிப்படை கும்பலில் ஒருவரை விட்டு மாவட்ட செயலாளரின் கணவர் ஜெயபாலா ஆசிரியரை மிரட்டியதை மட்டுமே முகநூலில் வெளியிட்டிருந்தோம். இதில் அவர் அந்த சாதி, இவர் இந்த சாதி என்ற நோக்கமெல்லாம் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியலில் விமர்சனங்கள் வரும் போது அதை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அல்லக்கைகளை வைத்து மிரட்டுவதற்கு பதிலாக அரசியலை விட்டே ஒதுங்குவது சாலச்சிறந்தது. மாவட்ட செயலாளர் மலர்விழியின் கணவர் ஜெயபாலா பொதுமக்களாக எங்கு வேண்டுமானாலும் எந்த அரசு நிகழ்ச்சிகளில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் அங்கு கூடியிருக்கும் 100-க்கணக்கான மக்களில் ஒருவராக ஆனால் அரசு விழா மேடையில் இருந்தால் நிச்சயம் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம். அதனால் நீங்க உங்க அல்லக்கைகளை வைத்து ஈனத்தனமான பதிவு போட்டாலும் கவலைப்படமாட்டோம். கண்ணில் பட்டதை ஆதாரத்துடன் கவலையின்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் எங்கள் பணி என்றென்றும் ஒரே நேர்கோட்டில் தான் பயணிக்கும். உங்களைப் போன்ற ஒரு சிலரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அதற்காக நீங்கள் எங்களுக்கு என்ன பெயர் வைத்தாலும் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்போம். மேலும் இது குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான வாக்குவாதம் கிடையாது. போனில் பேசும் நாகரீகம் தெரியாத நபர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்குமான பதிவு மட்டுமே இது. மற்றபடி அனைத்து சமுதாய மக்களும் எங்கள் உறவுகள்தான். நீங்க இன்னும் எத்தனை பேரை வைத்து வேண்டுமானாலும் போனில் ஏன் நேரில் கூட வந்து மிரட்டுங்க. அதையும் நாங்க செய்தியாகத்தான் போடுவோமே தவிர, உங்களுடன் சரிக்கு சரி மல்லுக்கு நிற்க மாட்டோம். ஏனென்றால் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் அரசியல்வாதிகள் உங்களுக்கும், எங்களுக்குமுண்டான ஒரே ஒரு வித்தியாசம் இது மட்டுமே. முடிந்தவரை நாங்கள் விமர்சிக்க முடியாத அளவுக்கு புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button