மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய நவீன கருவிகள் போக்குவரத்து போலீசாரிடம் சூப்பிரண்டு வழங்கினார்…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மதுபோதையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் அதற்கான பகுப்பாய்வு கருவிகளை மாவட்ட காவல் துறையின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது. 2.7 லட்சம் மதிப்பில் 6 சுவாச பகுப்பாய்வு கருவிகள் மாவட்டத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.இந்த கருவிகளை நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் போக்குவரத்து போலீசாரிடம் வழங்கினார். இதன் மூலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிந்து அவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வாகன ஓட்டிகள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் சிவா (ராமநாதபுரம்), பிரதாப் சிங் (ராமேசுவரம்), வெங்கடேஸ்வரன் (பரமக்குடி), ராமநாதபுரம் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.



