தமிழகம்மாவட்டச் செய்திகள்

கட்டுப்பாடு தேவை…!

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பித்து, “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற கொள்கையின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

காளையார் கோவில் காவல்நிலையம்…

அந்த வகையில், ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய காளையார்கோவில் காவல் நிலையம், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நம்பிக்கையின் பாலமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏற்படும் குடும்பத் தகராறுகள், நிலத் தகராறுகள், வாய்த்தகராறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் உணர்ச்சிவசப்பட்டு காவல் நிலையத்தை நாடி வரும் மக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையற்ற கால விரயம் மற்றும் பகைமையை தவிர்க்கும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரிய செயலாகக் கருதப்படுகிறது.
ஒரு காவல் நிலையம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், குற்றச் செயல்களில் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கிராம மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் புரிந்து கொண்டு சட்டத்திற்கு உட்பட்ட தீர்வுகளை வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். அந்த வகையில் காளையார்கோவில் காவல் நிலையம், 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டு சட்டம்ஒழுங்கை பாதுகாக்கும் பணியை திறம்பட மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது காளையார்கோவில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் இரவு பகல் பாராது பணியாற்றியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களின் அர்ப்பணிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காளையார்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் திரு. அழகுமுத்து தலைமையில் காவல் நிலையம் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் காலம் உள்ளிட்ட பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும் சட்டம்ஒழுங்கை திறம்பட கையாண்டு காவல்துறை பணியாளர்களை அன்போடும் ஒற்றுமையோடும் வழிநடத்தி வருவதாகவும், மக்கள் காவல் நிலையம் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகவும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
மேலும், காவல் நிலையத்திற்கு வரும் ஏழை மற்றும் எளிய மக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, விசாரணைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தெரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தனது சொந்த செலவில் உணவுவாங்கி கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார். அதேபோல், சாலையோரங்களில் பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவது, உதவி தேவைப்படுவோருக்கு மறைமுகமாக உதவுவது போன்ற மனிதநேய பணிகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் முதல் கடைநிலை காவலர் வரை பலரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளின்றி மக்கள் நலன் கருதி பணியாற்றி வருவது காவல்துறையின் சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சிலர் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்களை பயன்படுத்தி காவல் நிலையங்களில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதாகவும், காவல்துறையை அழுத்தம் கொடுத்து தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற முயற்சிப்பதாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற புகார்கள் அளிப்பது, மொட்டை மனுக்கள் அனுப்புவது, ஊடகங்களில் அவதூறு செய்திகள் வெளியிடுவதாக மிரட்டுவது, நீதிமன்ற நடவடிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக எச்சரிப்பது, அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பெயரில் போராட்டங்களை நடத்துவதாக மிரட்டுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பணிகளை தடுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சட்டத்தின் செயல்பாட்டையே பாதிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, காவல் நிலையங்களில் அத்துமீறி தலையிட்டு சட்ட விரோத அழுத்தங்களை ஏற்படுத்தும் நபர்களை உளவுத்துறை மூலம் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
காவல்துறை தனது சட்டப்பூர்வ அதிகாரங்களின் அடிப்படையில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்படுவதற்கு தேவையான பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும், காளையார்கோவில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எந்தவித வெளி அழுத்தமும் இல்லாமல் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேர்மையான காவல்துறையினரின் பணிகளை மதித்து ஊக்குவிப்பதே சமூக நலனுக்கும் சட்டம்ஒழுங்கு பாதுகாப்பிற்கும் அடித்தளமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அனைத்து மக்களையும் அனுசரித்து ஆதரவு கரம் ஏற்றி அன்போடு சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கும் காளையார் கோவில் காவல் நிலைய காவல்துறைக்கு எங்களது காலை அஞ்சல் நாளிதழ் மற்றும் அதிரடி செய்தி புலனாய்வு இதழின் சார்பாக ராயல் சல்யூட்.

✍️டாக்டர் சிறியூர் செ.செல்லப்பாண்டி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button