தமிழகம்

சீமான் வீட்டுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- கயல்விழி தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தி.மு.க. முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று வாழ்த்தினார்.

நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு மேள தாளங்கள் முழங்க பெண்களுடன் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்வலமாக சென்றார். அவருடன் சென்ற பெண்கள் பழத்தட்டுகளை எடுத்து சென்றனர்.

அனிதா ராதா கிருஷ்ணன், சீமான்- கயல்விழி குடும்பத்தினருடன் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறார். அந்த வகையில்தான் அவர் இன்று தாய்மாமன் சீராக சீமானின் பெண் குழந்தைக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து சென்று உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வீட்டுக்கு வெளியில் வந்து கைகூப்பி வரவேற்றார். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் சீமானுக்கு பட்டு வஸ்திரம் ஒன்றை அணிவித்தார்.

அதனை மறுநொடியே சீமான் தனது கழுத்தில் இருந்து எடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கழுத்தில் போட்டார். பின்னர் அவரது கையை பிடித்து தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் குழந்தைக்கு தங்க செயின் ஒன்றை பரிசளித்தார்.

சீர்வரிசை கொண்டு சென்ற போது நாதஸ்வரம், கெட்டி மேளம் முழங்கப்பட்டது. சீமான் வீட்டு அருகில் இருந்து நடந்து ஊர்வலமாக சென்று அனிதா ராதாகிருஷ்ணன் சீர்வரிசை பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button