ராமநாதபுரம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை!!!

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஆட்டுச்சந்தை சுற்றுவட்டார பகுதியிலேயே மிகப்பெரிய ஆடு விற்பனை சந்தையாகும்.சக்கரக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சி மைதானத்தில் இந்த சந்தை நடைபெறும்.இச்சந்தைக்கு விளாத்திகுளம்,சிவகங்கை,விருதுநகர், காரியாபட்டி,நரிக்குடி,மானாமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார விவசாயிகள் வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகள்,உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் கூடுவது வழக்கம்.அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல்,ரம்ஜான்,கிறிஸ்துமஸ்,பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இங்கு ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும்.இந்நிலையில் பக்ரீத் பண்டிகையைஒட்டி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலை முதல் தங்கள் வளர்க்கும் ஆடுகளை ஆட்டு சந்தைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் பேரம் பேசி தங்களுக்கு தேவையான ஆடுகளை குட்டிகளாகவும்,பெரிய ஆடுகளாகவும் மொத்தமாகவும் வாங்கிச் சென்றனர்.ஆட்டு கிடாய்கள் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்பட்டது.பக்ரீத் பண்டிகை மற்றும் திருவிழாக்களை முன்னிட்டு சக்கரக்கோட்டை ஆட்டு சந்தையில் சுமார் ரூ.2 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.



