தமிழகம்

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்திலும், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்திலும் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில், கவர்னர் அர்லேக்கர் உரையாற்ற இருக்கிறார். கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரையை தொடர்ந்து, அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

தொடர்ந்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் தி.மு.க. அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட் ஆகும். இப்போது, தாக்கல் செய்யப்படுவதே முழு பட்ஜெட் ஆகும்.

த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. எனவே, பட்ஜெட் அறிவிப்பில் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவாக, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதில் உரை வழங்குவார்.

தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள். அனேகமாக, ஆகஸ்டு மாதம் 2-வது வாரம் வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button