சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பாமகவின் அனைத்துக் கட்சி கலந்தாய்வு கூட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை குறித்து பா.ம.க சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்!
வளர்ச்சியும், வீக்கமும் தோற்றத்தில் ஒன்றாக இருக்கக் கூடும். ஆனால், மருத்துவக் கண்ணோட்டத்தில் இரண்டும் வேறு வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் முன்னேறினால் தான் அது மாநிலத்தின் வளர்ச்சியாகக் கருதப்படும். மாறாக, சில தரப்பினர் மட்டும் வளர்ச்சியடைந்து, பல தரப்பினர் வளர்ச்சிப் படிக்கட்டுகளில் பின்தங்கியிருந்தால் அது வீக்கம், அதாவது சமச்சீரற்ற வளர்ச்சியாகவே பாதிக்கப்படும். இதனால் சமூகங்களிடையே சமநிலை பாதிக்கப்படுவதால் சமூக மோதல்கள், குற்றங்கள் போன்றவை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டிலும் இத்தகைய சமச்சீரற்ற வளர்ச்சிப் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து நிலைகளிலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றால், எங்கெல்லாம் வளர்ச்சிக் குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டும். அதற்கான கருவி தான் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநிலை ஆகியவற்றில் எந்தெந்த நிலையில் உள்ளன என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும். அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69% இட இதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.50%, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.50%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியல் இனத்தவருக்கு 15%, பட்டியலின அருந்ததியருக்கு 3%, பழங்குடியினருக்கு 1% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் 7 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்களும், அருந்ததியர்களையும் உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்களும், பழங்குடியினத்தில் 36 சமூகங்களும் உள்ளன. இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சமூகத்திற்கும் அதன் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான். இவர்களில் எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதற்கான அத்தியாவசியத் தேவை தான் சமூகநீதி எனும் சாதிவாரி கணக்கெடுப்பு.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் சமூகநீதிக் கொள்கை ஆகும். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இப்போதும் 50% உச்சவரம்பு என்பதைக் கடந்து 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மட்டுமின்றி, அதற்கான சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்த ஒரே மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு தான் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புக்கு காரணமான 69% இட ஒதுக்கீட்டிற்கே இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் 2012-ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மே 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்த மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதைக் காரணம் காட்டி முடித்து வைக்கப்பட்டது. ஆனால், வேறு சில காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதிய வழக்குகளை தொடருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு புதிய வழக்குகள் தொடரப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் அவை விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் உடனடியாக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தக் கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்கள் போதுமானவையாக இருக்காது. தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் தேவைப்படும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்கவே முடியாததாகும்.
தேசிய அளவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டும் தான் மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் சமூகநீதி நடவடிக்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு தேவையான சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து வகை அமைப்புகளும் மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி சாதிவாரி சர்வே நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. அந்தத் தீர்ப்புகளுக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றமும் மறுத்து விட்டது.
இந்தியாவில் பீகார், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, ஜார்க்கண்ட் போன்ற மேலும் பல மாநிலங்களிலும் சமூகநீதி சர்வேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழ்நாட்டை இப்போது ஆட்சி செய்யும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக, ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையிலும் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; அதனடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு நிலையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாமக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி, சமூகத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்துகிறது; இதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கவும், இந்த அனைத்துக் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் விரைவில் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து சாதிவாரி சர்வே நடத்துமாறு கோரிக்கை விடுக்கவும் இந்தத் கூட்டம் தீர்மானிக்கிறது.



