கமுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜை:கலெக்டர் துவக்கி வைத்தார்!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் வேளாண்மை வணிக அலுவலக வளாகத்தில் குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையேற்று குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
கமுதியில் வேளாண் வணிக அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க மிளகாய் இருப்பு வைத்து பயன்பெறும் வகையில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிட்டங்கி ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மிளகாய் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய மிளகாய்களை குளிர்பதன சேமிப்பு கிட்டங்கில் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்து பயன்பெறும் வகையில், இந்த சேமிப்பு கிட்டங்கி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்ந நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன்,ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா,வேளாண்மை ஒழுங்குமுறை வணிக மையம் கண்காணிப்பாளர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



