தமிழகம்

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசு: தமிழர் அதிகாரம் தலைவர் கடும் கண்டனம்

சென்னை,ஜீன்.30:-

தமிழர் அதிகாரம் தலைவர் ஆர்.எஸ்.அழகர்சாமி பாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் அராஜகப் போக்கிற்கு ‘தமிழர் அதிகாரம் கட்சி’ சார்பில் எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல், தன்னிச்சையாக அணை கட்ட முயல்வது தமிழகத்தின் மீதான அப்பட்டமான நீர் உறிஞ்சல் அரசியலாகும்.

தமிழகத்திற்கு வர வேண்டிய சட்டப்பூர்வமான காவிரி உரிமையைப் பறிக்க நினைக்கும் கர்நாடக அரசின் இந்த முயற்சியை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
வெளி மாநில நீர் ஆதாரங்கள் ஒருபுறம் பறிபோகும் நிலையில், நமது உள்நாட்டு நீர் மேலாண்மையையாவது நாம் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய நீர் ஆதாரங்களான கண்மாய்கள், குளங்கள் மற்றும் ஊரணிகள் தான் நமது விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரம். வரப்போகும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கண்மாய்கள் மற்றும் கிராமப்புற ஊரணிகளைத் தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பெய்யும் மழைநீரைச் சேமிக்க முடியும்.


அதோடு, நமது நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் ஆக்கிரமித்து, நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்சும் ‘நீர் கொள்ளையன்’ சீமைக் கருவேல மரங்களை (கருவமரம்) நாம் இன்னும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. மழை தடுத்தான், மண் கெடுத்தான் என நம் வாழ்வாதாரத்தையே அழிக்கும் இந்த நச்சுப் பூதத்தை நாம் வேரறுக்கத் தவறினால், எதிர்கால சந்ததிக்கு தண்ணீர் இல்லாமல் நம் நிலமே பாலைவனமாகிவிடும்.


எனவே, மேகதாது அணை முயற்சியை முறியடிக்கவும், மழைக்காலத்திற்கு முன்பே நம் நீர்நிலைகளைத் தூர் வாரி, கருவமரங்களை முழுமையாக ஒழிக்கவும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழர் நிலத்தின் நீர் உரிமைக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் ‘தமிழர் அதிகாரம் கட்சி’ எப்போதும் முன்னின்று சமரசமின்றி களம் காணும்.

இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button