புதிய ஆட்சியால் பத்திரிக்கையாளர்களுக்கு நல்லது நடக்குமா?

தமிழகத்தில் மாற்றத்திற்கான ஆட்சியை அமைத்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அதிரடி செய்தி புலனாய்வு இதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கிய விஷயமான அரசு வழங்கும் அக்ரிடேசன் கார்டு மற்றும் பிரஸ் பாஸ் ஆகியவைகளை பாரபட்சம் பார்க்காமல் முறைப்படி பத்திரிக்கை பிரிண்ட் செய்து வெளியிடும் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.அதே போல் கடந்த ஆட்சியில் 2 வருடங்களாக பி.ஆர்.ஓ,டி.டி,ஜே.டி உள்ளிட்ட சில அதிகாரிகளின் ஓரவஞ்சனையால் பல பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்கப்படாமல் இருக்கிறது.எனவே இது போன்ற மோசமான அதிகாரிகளை அங்கிருந்து மாற்றி விட்டு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமமாக அனைத்து சலுகைகளும் வழங்கக்கூடிய அதிகாரிகளை அங்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து சிறு,குறு பத்திரிக்கையாளர்களும் உங்களது ஆட்சியில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.தற்போது இருக்கும் அதிகாரிகள் மாற்றப்பட்டால் தான் அது சாத்தியமாகும்.அதே போல் தங்கள் சுயநலத்திற்காக அரசுக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கும் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.அவ்வாறு வரும் சங்கத் தலைவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும்.அவர்கள் கடந்த ஆட்சி காலங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து தங்களுக்கு வேண்டிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கூறி காரியம் சாதிப்பவர்களாக மட்டுமே இருந்துள்ளனர்.இதில் தனக்குத்தானே முன்னணி சங்கம் என வெற்று தம்பட்டம் அடித்துக் கொண்டு பத்திரிக்கை துறை சாராத சில நபர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி பல போலி பத்திரிகையாளர்கள் உருவாகுவதற்கு அவர்களே அடித்தளமாக இருந்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே சுயநலம் சாராமல் பத்திரிக்கையாளர்களுக்காக உண்மையாக போராடும் சங்கத் தலைவர்களை கண்டறிந்து அவர்களுடன் ஆலோசனை செய்து பத்திரிக்கையாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய உங்கள் அரசு முன்வர வேண்டும்.மீண்டும் அந்த ஜால்ரா கும்பல்கள் உங்களை நோக்கி படை எடுக்க வாய்ப்பிருப்பதால் உங்களது அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசின் தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பத்திரிக்கையாளர்கள் பிரிவினை வாதத்தை நீங்கள் நேரடியாக தலையிட்டு முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பணம் கொழுத்த ஊடக முதலைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்ரிடேசன் கமிட்டியை உடனடியாக கலைக்க வேண்டும்.இவர்களால் கஷ்டப்பட்டு பத்திரிக்கை நடத்தும் பல சிறு,குறு மற்றும் வளர்ந்து வரும் பத்திரிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த அரசு அங்கீகார அட்டை உள்ளிட்ட சலுகைகளை சிறு,குறு பத்திரிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்படாமல் நிறுத்திய பெருமை இந்த பணம் கொழுத்த ஊடக முதலைகளையே சாரும்.எனவே இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்யும்,செய்தித்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சிறு,குறு பத்திரிக்கையாளர்களுக்கான அரசு சலுகைகளை உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
எவ்வளவு பணம் கொழுத்த ஊடக முதலாளிகளாக இருந்தாலும் அவர்களும் தங்களது பத்திரிக்கையை பதிவு செய்வது இந்திய பத்திரிக்கை பதிவாளர் ஜெனரலில் தான் என்பதை உணர்ந்து தங்களுடைய தலைமையிலான இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.



