கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி:கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு

கீழக்கரை,ஜீன்.18:-
ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழக்கரை தாலுகாவிற்குட்பட்ட பனையடியேந்தல், வேளானூர்,மாணிக்கனேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குளபதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
இதில் மேற்கண்ட கிராமங்களின் கிராம கணக்குகளான அடங்கல், பட்டாமாறுதல்கள், உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வருவாய்த் துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது இராமநாதபுரம் நில அளவை உதவி இயக்குநர் அண்ணாமலை பரமசிவம்,கீழக்கரை தாசில்தார் இராமசுப்பிரமணியன், தாசில்தார்(சமூக பாதுகாப்பு திட்டம்) கதிரவன் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



