கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி): கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1435 பசலிக்கான ஜமாபந்தி 16.06.2026 தேதி முதல் 25.06.2026 தேதி வரை நடைபெறுகிறது.பரமக்குடி வட்டத்தில் டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன் தலைமையிலும், திருவாடானை வட்டத்தில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ செ.ஹபிபூர் ரஹ்மான் தலைமையிலும், இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் செல்வி தலைமையிலும்,கடலாடி வட்டத்தில் ஆர்.டி.ஓ (பொ) பரமக்குடி கலைமன்னன் தலைமையிலும், ராமநாதபுரம் வட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி தலைமையிலும்,கமுதி வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமையிலும்,ராமேசுவரம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராஜா தலைமையிலும்,முதுகுளத்தூர் வட்டத்தில் உதவி இயக்குநர் (கலால்) கங்காதேவி ஆகியோர் தலைமையிலும் நடைபெறுகிறது.


கீழக்கரை தாசில்தார் அலுவலகத்தில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில், திருஉத்திரகோசமங்கை பிர்க்கா உட்பட்ட எக்ககுடி, பனைக்குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
இதில் மேற்கண்ட கிராமங்களின் கிராம கணக்குகளான அடங்கல், பட்டாமாறுதல்கள்,உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா,முதியோர் உதவித்தொகை,பட்டாமாறுதல் மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பயனாளி ஒருவருக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் (உழவர் பாதுகாப்பு திட்டம்) இறப்பு நிவாரணமாக ரூபாய். 22,500/-பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது அளவை உதவி இயக்குநர் ராமநாதபுரம் நில அண்ணாமலை பரமசிவம், கீழக்கரை தாசில்தார் இராமசுப்பிரமணியன், தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கதிரவன் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



