ராமநாதபுரம் மாவட்டத்தில் “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ந் தேதி 2025 (01.04.2025) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2026 (31.03.2026) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.கடந்த நிதியாண்டில் (2025-2026) அதாவது 01.04.2025 முதல் 31.03.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.மத்திய /மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள்/பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்.06.07.2026 அன்று மாலை 5.45 மணி ஆகும்.இவ்விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



