ராமநாதபுரம் அம்மா பூங்காவை பார்வையிட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் உத்தரவு…!

ராமநாதபுரம் நகர்பகுதியில் உள்ள அம்மா பூங்காவை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில்,தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அம்மா பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டதுடன்,அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வந்த பொதுமக்களை சந்தித்து இதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.அப்பொழுது அமைச்சரிடம் நடைபயிற்சியாளர்கள் இங்கு கூடுதலாக குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு உடற்பயிற்சிக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் தற்பொழுது உள்ள ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தில் கூடுதல் உபகரணங்கள் வழங்கிட வேண்டும்,அதேபோல் நாள்தோறும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகளவு வருவதையொட்டி,ஆங்காங்கே பழுதடைந்துள்ள நடைபயிற்சி தளங்களை சீர் செய்திடவும்,போதிய அளவு குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் கேட்டுக்கொண்டதையொட்டி அமைச்சர் மாவட்ட கலெக்டர் மூலம் விரைவில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டு வரும் Synthetic மைதானம் அமைக்கும் பணியை பார்வையிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சர்வதேச அளவிலான வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுடன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்,மாவட்ட கலெக்டர் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூ.தினேஷ்குமார்,பிடிஓக்கள் ஜெயமுருகன்,கோட்டை இளங்கோவன்,சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



