சிவகங்கையில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க தொண்டன் இருக்கும் வரை என்றைக்குமே பாசிச சக்திகளால் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரை!!!

இணை ஆசிரியர்:அ.நூருல் அமீன், 8220145 723.

சிவகங்கை,மார்ச்.25:-
சிவகங்கையில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க தொண்டன் இருக்கும் வரை என்றைக்குமே பாசிச சக்திகளால் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என பேசினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும்,தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், கீழ்கண்டனி மானாமதுரை சாலையில் உள்ள ராஜா பேலஸில் நேற்று நடைபெற்ற சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றியஉரை பின்வருமாறு:-
இன்று சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நேற்று காலையில் கோவையில் தொடங்கி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் அமைப்பாளர்களையும் உங்களையெல்லாம் என அனைத்து மாவட்ட சந்தித்து சந்திப்பதற்காக இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கிறேன்.
இந்தச் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் இரண்டுமே என்றைக்கும் கழகத்தின் கோட்டை ஆதிக்கம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எப்போதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று சொல்லிப் போராடித் தியாகம் செய்த மண் இந்த ராமநாதபுரம், சிவகங்கை மண். அப்படிப்பட்ட சிவகங்கை,ராமநாதபுரம் இளைஞர் அணி உங்களையெல்லாம் சந்திப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிர்வாகிகள் உங்களையெல்லாம் சந்திப்பது எனக்கு எப்பொழுதுமே கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். என் குடும்பத்தினரை, சகோதரர்களைச் சந்திக்கும் பொழுது எவ்வளவு ஒரு மகிழ்ச்சி ஏற்படுமோ அந்த மகிழ்ச்சி எப்பொழுதுமே ஏற்படும். இன்றைக்கும் அதே மகிழ்ச்சியைத் தரும். என் குடும்பத்தினரை, சகோதரர்களைச் சந்திக்கும் பொழுது எவ்வளவு ஒரு மகிழ்ச்சி ஏற்படுமோ அந்த மகிழ்ச்சி எப்பொழுதுமே ஏற்படும். இன்றைக்கும் அதே உணர்வோடுதான்,அதே மகிழ்ச்சியோடுதான் உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன்.இப்பொழுதெல்லாம் நாம் அடிக்கடி சந்திக்கிறோம். போதும் போதும் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சந்திக்கிறோம். ஆனால் எவ்வளவு சந்தித்தாலும் போதாது.சென்ற மாதம் 7-ஆம் தேதி தெற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை விருதுநகரில் நடத்திக் காட்டினோம். எல்லாரும் பிரமிக்கக்கூடிய அளவில் நிர்வாகிகள் சந்திப்பா அல்லது மாநாடா என்று கேட்கும் அளவுக்கு அந்த நிர்வாகிகள் சந்திப்பை நீங்கள் அத்தனை பேரும் உழைத்து அதனை மிகப்பெரிய ஒரு வெற்றி விழாவாக மாற்றிக் காட்டினீர்கள். அப்பொழுது நான் உங்களுக்குத் தனியாக நன்றி சொல்லவில்லை. இப்பொழுது இந்த வாய்ப்பை உங்களுக்கு நன்றி சொல்வதற்கும் நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் நடத்திக் காட்டிய, வெற்றி விழாவாக நடத்திக் காட்டிய உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று மீண்டும் ஒரு முக்கியமான காரணத்திற்காக, ஒரு மிக முக்கியத் தருணத்தில் நாம் சந்திக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, ஏப்ரல் 23. இன்றைய தேதி 24. நம்கையிருப்பில் இன்னும் சரியாக 30 நாட்கள் இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது களத்தில் இளைஞர் அணி’ என்கிற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கி நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள். உங்களின் பிரச்சாரம், உழைப்பின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நாம் பெற்றோம். இன்று அதைவிடப் பெரிய வெற்றியைச் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் பெறவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
இன்று இந்தியாவில் பல கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பதற்கே திண்டாடிக்கொண்டு, திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் தி.மு.க-வில் இளைஞர் அணியில் மட்டும்தான் இன்று பூத்துக்கு ஒரு நிர்வாகியை நாம் நியமித்திருக்கிறோம். பூத்துக்கு ஒரு நிர்வாகியை நியமித்துவிட்டோம், மிகப்பெரிய ஒரு இளைஞர் படையைக் கட்டமைத்திருக்கிறோம், ஒரு குழுவை உருவாக்கிவிட்டோம். அவர்களைத் தேர்தல் என்கிற ஜனநாயகப் போருக்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உங்களையெல்லாம் சந்திப்பதற்கு நான் வந்திருக்கிறேன்.
தி.மு.க-வில் 25 அணிகள் இருக்கின்றன. டாக்டர் கலைஞர் அவர்கள் எப்பொழுதுமே சொல்வார், எத்தனையோ அணிகள் இருந்தாலும் முதல் அணி என்றால் அது இளைஞர் அணிதான் என்று கலைஞர் சொல்வார். எந்த வேலை சொன்னாலும் அதை முதலில் களத்தில் இறங்கிச் செய்து காட்டுகிற அணி நம் இளைஞர் அணி. அதனைப் பலமுறை செய்து காட்டியிருக்கிறோம்.
குறிப்பாக நான் பொறுப்பேற்ற பிறகு ஆறு ஆண்டுகளில் பல்வேறு பணிகளைச் செய்து முடித்திருக்கிறோம். தினமும் மக்களைச் சந்திக்கிறோம், தலைவர் என்ன சொன்னாலும் உடனடியாக இளைஞர் அணி செய்துகாட்டுகிறது.
இளைஞர் அணி என்பது தாய்க்கழகத்துக்கு நாம் பணியாற்றுவதற்கு வாய்ப்பைக் கொடுப்பதற்கு முன்னால் நமக்கு வைக்கக்கூடிய ஒரு தேர்வு. கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் சிறந்த வீரர்களாக இருப்போம். ஆனால் எடுத்தவுடனேயே போட்டியில் முதன்மையான விளையாடுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்காது. நாம் தொடக்க ஆட்டக்காரரா, இல்லை நடுவரிசை ஆட்டக்காரரா, பந்துவீச்சாளரா, விக்கட் கீப்பரா எதில் நாம் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் என்று தெரிந்துகொள்வதற்கு நமக்கு வலைப்பயிற்சி கொடுப்பார்கள். அப்படி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய வலைப்பயிற்சிதான் களத்தில் இளைஞர் அணி பணி. எனவே நீங்கள் இளைஞர் அணியில் எடுக்கக்கூடிய இந்தப் பயிற்சிதான் நாளைக்கு உங்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கப் போகிறது.
தொடர்ந்து இந்த ஆறு ஆண்டுகளாகக் களத்தில் இருக்கிறோம், மக்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். இப்பொழுது மீண்டும் மக்களைச் சந்திப்பதற்கு நாம் தயரராக தொடர்ந்து இந்த ஆறு ஆண்டுகளாகக் களத்தில் இருக்கிறோம், மக்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். இப்பொழுது மீண்டும் மக்களைச் சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எந்தத் தைரியத்தில் மக்களைச் சந்திக்கப் போகிறோம்? ஒரே தைரியம்தான், நம் தலைவர் அவர்கள் மட்டும்தான். ஐந்து ஆண்டுகளில், 2021 தேர்தலுக்கு முன்னால் நாம் என்னவெல்லாம் சொன்னோம், என்னவெல்லாம் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம், அதையெல்லாம் செய்திருக்கிறோம் என்கிற தைரியத்தில் இன்று மக்களைச் சந்திக்கப் போகிறோம். மக்களைச் சந்திக்கும் பொழுது சில திட்டங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
நூற்றுக்கணக்கான திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறோம். இருந்தாலும் ஒரு சில திட்டங்களை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது என்னுடைய கடமை. இதில் முக்கியமான விஷயம் தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் செய்து கொடுத்திருக்கிறோம்.
முதல் திட்டம், தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம். நம் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் இட்ட முதல் கையெழுத்து மகளிர்க்கான விடியல் பயணத் திட்டம். இன்று விடியல் பயணத் திட்டத்தின் மூலம் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு மகளிரும் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாகக் குறைந்தது 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமித்திருக்கிறார்கள்.
நம் தலைவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார், குழந்தைகளுக்குக் கல்வி மிக மிக முக்கியம். நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு சொத்து என்றால் அது நம் கல்விதான். அதனால்தான் சிறுவர்கள் எல்லாரும் படியுங்கள் படியுங்கள் என்று நம் தலைவர் முதலமைச்சர் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார். அதற்காக நம் தலைவர் கொண்டு வந்ததிட்டம்’ முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளும் காலையில் பள்ளிக்குச் சென்றால் முதலில் தரமான காலை உணவு, அதன் பிறகு தரமான கல்வி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இன்று இந்தியாவின் ஜி.ஈ.ஆர் (Gross Enrollment Ratio) என்று சொல்வார்கள். இந்தியாவின் மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26 சதவிகிதம். ஆனால் நம் தமிழ்நாட்டின் மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவிகிதம். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். அதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று நம் தலைவர் கொண்டு வந்த திட்டம்தான் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும், தனியார் கல்லூரியாக இருந்தாலும், அவர்கள் படித்து முடிக்கிற வரைக்கும் அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் அரசு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. 13 இலட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இப்பொழுது சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்து, இதெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டம். 10 இலட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை அறிவித்து ஒரே மாதத்தில் கொடுத்து முடித்திருக்கிறோம்.
இன்று எதிர்க்கட்சிகள் நம் மேல் விமர்சனம் செய்வார்கள். இந்த மடிக்கணினி திட்டம் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம், அதனை நாம் நிறுத்திவிட்டோம், தேர்தல் வருவதால் திரும்பக் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதனை நம்பாதீர்கள், அது உண்மை கிடையாது. நான் மறுக்கிறேன். உண்மை என்னவென்றால் அ.தி.மு.க கொண்டு வந்த மடிக்கணினி கொடுக்கும் திட்டம், குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டு 2019-ஆம் ஆண்டு அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அப்பொழுது அ.தி.மு.க-வின் ஆட்சி. அதன்பிறகு நம் தலைவர் எல்லாரையும் அழைத்து பேசும் பொழுது சொன்னார்கள். “அது நல்ல திட்டம். ஆனால் நாம் பள்ளி படிக்கும் மாணவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. கல்லூரி படிக்கும் மாணவர்களுக்குக் கொடுத்தோம் என்றால் அவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வேலை தேடிக்கொள்வதற்கு, ஒரு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்” என்று சொல்லி, இன்று 10 இலட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி திட்டத்தைக் கொடுத்திருக்கிறோம். மிக முக்கியமாக Perplexity AI போன்ற நவீனத் தொழில்நுட்பம் கொண்ட மடிக்கணினி திட்டத்தை நாம் கொடுத்து முடித்திருக்கிறோம்.
வரலாற்றில் முதல் முறையாக 3 சதவிகித விளையாட்டு ஒதுக்கீட்டில் 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்து கொடுத்திருக்கக்கூடிய அரசு நம் அரசு.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு திட்டம், உங்கள் அனைவருக்கும் தெரிந்த திட்டம்தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன திட்டம். இன்று ஒவ்வொரு மாதமும் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் தலைவர் கொடுத்திருக்கிறார்.
அந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எப்படியாவது இதனை நிறுத்த வேண்டும் என்று சில மாநிலங்களில், நீதிமன்றத்துக்குச் சென்று நிறுத்தியிருக்கிறார்கள். இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைத் தேர்தலைக் காரணங்காட்டி நிறுத்த வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் நம் தலைவர் அதனைத் தெரிந்துகொண்டு “நான் 1,000 ரூபாய் கொடுத்தால்தானே நிறுத்துகிறாய்? இப்பொழுது நான் 5,000 ரூபாய் கொடுக்கிறேன், நீ நிறுத்திப் பார்” என்று இன்று ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு, ஒரு கோடியே 31 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நம் தலைவர் அவர்கள் வழங்கியிருக்கிறார்.
ஒரு வாக்குறுதியும் சேர்த்து கொடுத்திருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் உரிமைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்போம் என்கிற உறுதிமொழியை நம் தலைவர் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி நூற்றுக்கணக்கான திட்டங்கள் இருக்கின்றன. தாயுமானவர் திட்டம் என்று ஒரு திட்டம். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வெயிலில் நியாயவிலைக் கடையில் வரிசையில் நிற்பதற்கு இனிமேல் அவசியம் கிடையாது. அவர்கள் வீடுகளுக்கே அரசு கொண்டு சென்று நியாயவிலைப் பொருட்களைக் கொடுக்கும் திட்டம். 28 இலட்சம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகிறார்கள்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொன்றையும் நம் தலைவர் அவர்கள் பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டு இருக்கிறார்.
சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு நம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்-கொட்டாம்பட்டி நெடுஞ்சாலை 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
மானாமதுரை சாலையில் சிவகங்கை நகரத்துக்குப் புறவழிச்சாலை புதிதாக அமைக்கப்படுகிற சாலைப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிவகங்கை-தொண்டி சாலை 75 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர்-மேலூர் சாலையை விரிவுபடுத்தி இன்று புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்குடியில் மினி டைடல் பார்க் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.
2,120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டத்துக்கு கூட்டுக்குடிநீர்திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 20 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டிக் கொடுத்திருக்கிறோம். 70கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராமநாதபுரம்-மதுரை-தனுஷ்கோடி சாலைகள் மேம்படுத்தும் பணிகள். 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கமுதி புறநகர் சாலை,பாம்பன் வடக்கு கிராமத்தில், தங்கச்சி மடத்தில், குண்டுக்கல்லில் மீன் இறங்குதள மையங்கள். பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
4,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூட்டுக்குடிநீர் திட்டம். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணிகள் நடைபெற்றிருக்கின்றன.
என்னுடைய விளையாட்டுத்துறை சார்பில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ஆரம்பிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, திறக்கப்படும். விரைவில்
இப்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்ன தேவை என்று கேட்டு கேட்டு நம் அரசு செய்திருக்கிறது, நம் முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார்கள். அதனால்தான் இன்று நம் தமிழ்நாடு இந்தியாவிலேயே வளரும் மாநிலங்களில் சதவிகித அடிப்படையில் முதல் முறையாக 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக நம் தமிழ்நாடு இடம்பிடித்திருக்கிறது.
நாம் இவ்வளவு செய்திருக்கிறோம், தமிழ்நாடு இவ்வளவு சாதித்திருக்கிறது. ஒன்றிய அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறதா? நமக்கு என்று ஏதாவது சிறப்புத் திட்டங்கள் கொடுத்திருக்கிறார்களா? நாம் கேட்கக்கூடிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறதா?
இன்று தேர்தல் அறிவித்துவிட்டார்கள் என்ற உடனே பிரதமரும், அமித்ஷா அவர்களும் இருவரும் மாறி மாறி வருகிறார்களே, நாம் கேட்கக்கூடிய திட்டம், நிதிவரவில்லை.
இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம் தலைவர் அவர்கள்தான். நிதி உரிமை மறுக்கப்படுகிறது, கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, மொழி உரிமை இப்படி மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் ஒன்றிய பா.ஜ.க அரசு பறிக்கப் பார்க்கிறது. இன்று மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு நான்கு அடிமைக் கட்சிகளைக் கூட வைத்துக்கொண்டு எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை, கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க தொண்டன் இருக்கும் வரை என்றைக்குமே பாசிச சக்திகளால் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று. நாம் அனுமதிக்க மாட்டோம். ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது தமிழ்நாடு. அவர்களின் நாடகம் இங்கே பலிக்காது.
அதனால்தான் நம் தலைவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார் வரவிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் நடக்கக்கூடிய தேர்தல். நிச்சயம் தமிழ்நாடு அணி வெற்றி பெறும். பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வின் டெல்லி அணிக்கும் நம் தி.மு.க தமிழ்நாடு அணிக்கும் நடக்கக்கூடிய தேர்தல் போட்டி இது.
உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், யோசித்துப் பாருங்கள். செய்தி பார்ப்போம், செய்திகள் படிப்போம், தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்ப்போம். தேர்தல் வந்துவிட்டால் நிறைய முக்கியச் செய்திகள் வரும். ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் அலுவலகத்துக்குச் சென்றால் இப்பொழுது அது முக்கியச் செய்தி. “என்னப்பா இவர் அங்க போய்விட்டார், அவர் அலுவலகத்துக்குச் செல்லாமல் வேறு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார், ஒருவேளை கட்சி மாறப்போகிறாரா?” என்று முக்கியச் செய்திகள்போடுவார்கள்.
அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாம் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் என்பதுதான் இரண்டு நாட்களாக முக்கியச் செய்தி. ஏனென்றால் அவர் அலுவலகத்துக்கு செல்லமாட்டார், டெல்லிக்குத்தான் செல்வார்.அமித்ஷாவின் அலுவலகத்தை அவர் அலுவலகம் என்று நினைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
நம் தலைவர்தான் அதையும் சொன்னார்கள். “எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்களின் அலுவலகம் சென்னையில் இராயப்பேட்டையில் இருக்கிறது. நீங்கள் மறந்து உங்களின் உரிமையாளரின் போய்க் அலுவலகத்திற்கே கொண்டிருக்கிறீர்கள்”. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மட்டும் அல்ல, அ.தி.மு.க-வின் உரிமைகளுக்கும் நாம்தான் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும், புரிந்து கொள்வார்கள். ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ஜாடிக்கு ஏற்ற மூடி” என்பார்கள். அதுமாதிரி இன்று மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாகத் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாறியிருக்கிறார். நான் பல முறை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். நகைச்சுவையாக இல்லை, இப்பொழுது அது மிகவும் தீவிரமாகவே ஆகிவிட்டது. அரசியலில் முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்போம், முரட்டுப் பக்தர்களைப் பார்த்திருப்போம். இன்று மோடியின் ஒரு முரட்டு அடிமையாகத் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இதில் அவர்களுக்குள் போட்டி வேறு, யார் மோடிக்கு மிகச்சிறந்த முரட்டு அடிமை? நான் டெல்லிக்கு விரைவாகச் செல்கிறேனா, நீ செல்கிறாயா என்று பார்ப்போம். சொன்னால் விமானத்தில் இல்லை ஓடியே போய்விடுவார்கள் போல இருக்கிறது டெல்லிக்கு. அந்த அளவுக்கு முரட்டு அடிமைகளாக இன்று சிலர் மாறி இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு பொருளை அறிமுகப்படுத்தினால், அது நன்றாக இருந்தது, மக்கள் அதனை நம்பினார்கள் என்றால் அது பெரிய வெற்றியாக அமைந்துவிடும். இதனை இன்னொரு நிறுவனத்துக்காரன் பார்த்துக் கொண்டே இருப்பான். இதனை வைத்து எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும், குறுக்கு வழியில் சம்பாதித்துவிட வேண்டும் என்று திட்டம் போடுவான். அதே மாதிரி ஒரு போலியான பொருளைத் தயார் செய்வான். இதற்குப் பெயர் ‘ சைனாமேக்’ என்று சொல்வார்கள்.
இன்று அதே மாதிரி டெல்லி மேக்’ காக அ.தி.மு.க கூட்டணி அமைந்திருக்கிறது. அந்தக் கூட்டணிக்குத் தமிழ்நாடு மக்கள் மத்தியில் உத்தரவாதமும் கிடையாது, பொறுப்புறுதியும் கிடையாது. தேர்தல் முடிந்த உடனே பா.ஜ.க மின் இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள்.
பீகாரில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். பா.ஜ.க-வுடன் கூட்டணிதான் வைத்தார். இன்று அவரை ஓரங்கட்டிவிட்டு பா.ஜ.க பீகாரின் ஆட்சிப் பொறுப்பை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 10 முறை முதலமைச்சரான நிதிஷ்குமார் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், ‘பாதம் தாங்கி’ பழனிசாமி எல்லாம் அவர்கள் கால் தூசிக்குச் சமம்.
இதனை நிச்சயம் அ.தி.மு.க-வுக்கு, பா.ஜ.க செய்து காட்டுவார்கள். எனவே இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சென்று நாம் பேச வேண்டும். இன்று பா.ஜ.க ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இறங்கி இருக்கிறார்கள். பா.ஜ.க மட்டும் இறங்கவில்லை, பா.ஜ.க-வின் ‘பி அணி’, ‘சி அணி’ வரை இறங்கி இருக்கின்றன. நாம் ஒன்றை உறுதி செய்ய வேண்டும். எத்தனை அணிகள் வந்தாலும் வெற்றிப்பெறப்போவது நம் தி.மு.க அணிதான். நம் தலைவர்தான் மீண்டும் வெற்றி பெறுவார் என்பதைநாம் உறுதிசெய்ய வேண்டும்.
நிர்வாகிகளாகிய உங்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அடுத்த 30 நாட்கள் மிகுந்த கவனத்துடன் நம் தேர்தல் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். உங்களுக்குக் கீழே பாக அளவில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேரையும் சந்தியுங்கள். அவர்கள் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தித்திருக்க வேண்டும். சந்தித்துத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள், உங்களுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் உங்களின் குடும்பத்தினரின் வாக்கை நாம் உறுதி செய்ய வேண்டும். ஊரெல்லாம் சென்று வாக்கு கேட்டிருப்போம், வீட்டில் கேட்க மறந்திருப்போம். அந்தச் கோபத்தை நம்மீது தேர்தல் அன்று காட்டிவிடக் கூடாது. எனவே உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய உங்களின் பெற்றோர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் பிள்ளைகள், உங்களின் மனைவி அவர்களின் வாக்கு ஒன்று கூடச் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க கூட்டணி நம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உதயசூரியன் சின்னத்துக்கு வந்தாக வேண்டும்.
மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் கூட அவர்களிடம் சென்று பேசுங்கள். அனைவரையும் சென்றடையுங்கள். அப்படிச் சந்திக்கும் பொழுது நம் இயக்கத்தின் கொள்கைகளை, நம் சாதனைகளை, திட்டங்களை என்னென்ன செய்து காட்டி இருக்கிறோம் என்பதைத் தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள். பொய் சொல்ல வேண்டாம், நம்மிடம் தரவுத்தளம் இருக்கிறது, நம்பர்ஸ் என்றைக்கும் பொய் சொல்லாது. குறிப்பாக இதற்கு முந்தைய 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு, நம் மாநிலம் என்னென்னவற்றையெல்லாம் இழந்தது, என்னென்ன உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்தோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அதனை இந்த ஐந்து ஆண்டுகளில் நம் தலைவர் எதையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறார், அதற்காக எவ்வளவு போராடி இருக்கிறார் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். எல்லாமே ஆதாரத்துடன் இருக்கிறது.
உங்களுக்கு என்று ஏற்கனவே நம் அன்பகம் குழுவில் இருந்து வாட்ஸ்அப் குழு உருவாக்கி இருப்பார்கள். நீங்கள் எல்லாம் அந்த வாட்ஸ்அப் குழுவில் நிச்சயம் ஆக்டிவாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையென்றால் பூத் வாரியாக வாட்ஸ்அப் குழுவை நீங்களே ஆரம்பியுங்கள். உங்களின் பகுதியில் இருக்கக்கூடிய வாக்காளர்களையும் அந்த வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள். நம் அரசின் திட்டங்கள், சாதனைகள் அதையெல்லாம் அதில் பதிவிட்டுக் கொண்டே இருங்கள். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியம், இதனைத் தேர்தல் கருதி நான் சொல்லவில்லை, இங்கே வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நிர்வாகியும் உங்களிடம் நான் சொல்லிக்கொள்வது, எந்த நேரத்திலும் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருங்கள். அவர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள். இது நான் தேர்தலுக்காகச் சொல்லவில்லை. உங்களின் செல்வாக்கில் ஒரு 50, 60 வாக்காளர்கள் உங்கள் கையில் நீங்கள் வைத்திருந்தீர்கள் என்றால், உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. பொதுமக்களின் நம்பிக்கைதான் பொது வாழ்க்கையில் அசைக்க முடியாத ஒரு சக்தி. அசைக்க முடியாத ஒரு சொத்து பொதுமக்கள் நம்பிக்கை.
அப்படி அந்தப் பொதுமக்களிடம் பேசும் பொழுது எப்பொழுதுமே மிகவும் ஜாக்கிரதையாக, கட்டுப்பாட்டுடன், கண்ணியத்துடன் பேசுங்கள். ஏனென்றால் இன்று எல்லார் கையிலும் அலைபேசி இருக்கிறது. எல்லாருமே இன்று ஒரு செய்தித் தொலைக்காட்சி, எல்லாமே நேரலை. ஏதாவது ஒரு சின்ன வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்திட மாட்டோமா, ஏதாவது ஒரு சின்ன தவறு நாம் செய்திட மாட்டோமா என்று எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள், செய்தித் தொலைக்காட்சிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்துப் பயன்படுத்துங்கள். பொதுமக்கள் நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்றால் உங்களை யாராலும் அசைக்க முடியாது. உங்களுக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த 10 வீடுகளுக்கு நான் பொறுப்பு, இந்தத் தெருவுக்கு நான் பொறுப்பு, இந்தத் குடும்பங்களுக்கு நான் பொறுப்பு என்று உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படித் திட்டமிட்டு, உத்திகளுடன், கவனத்துடன் நுணுக்கமான அளவில் பணியாற்றினீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி உறுதி, யாராலும் தடுக்க முடியாது.
வட்டம் மற்றும் பூத் அளவில் இருக்கக்கூடிய இளைஞர் அணி பொறுப்பாளர்களை நீங்கள் அடிக்கடி சந்தியுங்கள்,அவர்களை ஊக்குவியுங்கள். உங்களில் பல பேர் பி.எல்.ஏ-2′ ‘பி.எல்.சி’ -களாக இருப்பீர்கள். உங்களின் கடமைகள் என்னவென்று கேட்டுச் சரியாக அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பூத்தில், உங்கள் தொகுதியில் இளைஞர் அணி நிர்வாகிகளின் பணி தனியாகத் தெரிய வேண்டும். களத்தில் மட்டும் இல்லை தேர்தல் முடிவிலும் அது தெரிய வேண்டும். நீங்கள் எந்தெந்த பூத்தில் இருக்கிறீர்கள், உங்கள் பூத்தில் எவ்வளவு முன்னிலை என்கிற கணக்கு எல்லாமே எங்களுக்கு வந்துவிடும், தலைவருக்குச் சென்றுவிடும். இப்பொழுது தலைவர் அவர்கள் இளைஞர் அணி என்னென்ன செய்து கொண்டிருக்கிறது, என்ன பணியாற்றுகிறார்கள், பிரச்சாரத்தை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். தலைவர் அவர்கள் என்னை மட்டும் பார்க்கவில்லை, உங்களையும் சேர்த்துதான் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார். இது இளைஞர் அணிக்கு நம் இரண்டு பேருக்கும் சேர்த்து வைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தேர்வு இது.
இந்தத் தேர்வில் நிச்சயம் நாம் சும்மா இருந்தாலே வெற்றிபெற்று விடுவோம். ஆனால் சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சி பெற வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது, மீண்டும் உதயசூரியன் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு இளைஞர் அணி அதிகமாக வேலை பார்த்தார்கள் என்பதை எல்லாரையும் பேசவைக்க வேண்டும்.
பொதுவாக எதிர்க்கட்சிகள் தி.மு.கவைப் பார்த்தால் ஒன்று சொல்வார்கள். என்ன தெரியுமா? தேர்தல் என்று வந்துவிட்டால் தி.மு.க-காரன் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு இப்படி வேலை செய்கிறானே என்று சொல்வார்கள். நாம் அதனைச் சற்று மாற்றிக் காட்ட வேண்டும். தேர்தல் என்று வந்துவிட்டால் அன்பகத்தில் இருந்து ஒரு சின்ன செய்தி வந்துவிட்டால் போதும், 234 தொகுதியிலும் இளைஞர் அணித் தம்பிகள் தீயாக வேலை செய்தார்கள் என்று நாம் மாற்றிக் காட்ட வேண்டும்.
இங்கே வந்திருக்கக்கூடிய மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் அவர்களிடம் களத்தில் இளைஞர் அணி கலந்துரையாடுங்கள். எப்படிப் பிரச்சாரம் செய்யலாம்? எந்தப் பகுதியை இன்று தேர்ந்தெடுத்து மக்களைச் சந்திக்கலாம் என்பதைக் அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களின் அனுமதியைப் பெற்று உங்கள் பிரச்சாரத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர்களும் உங்களுக்குச் சேர்ந்து வழிகாட்டுவார்கள், உங்களை வழிநடத்துவார்கள்.
ஒவ்வொரு நாளும் எத்தனை பேரைச் சந்தித்தீர்கள்? எத்தனை வாக்காளர்களை நம் ஆதரவாளர்களாக நீங்கள் மாற்றினீர்கள் என்பதை ஒரு குறிப்பேடு போட்டுத் தயவு செய்து அதில் குறித்துக் கொள்ளுங்கள். உங்களின் செயல்பாடுகளை, உங்க பிரச்சாரத்தைப் புகைப்படத்துடன் தேதியுடன் அதில் குறித்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு இங்கே இராமநாதபுரம் சிவகங்கைக்குப் பிரச்சாரத்துக்கு நிச்சயம் வருவேன். வரும்பொழுது உங்கள் ஒவ்வொருவர் புத்தகத்தையும் வாங்கிப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும், நாங்கள் இவ்வளவு பிரச்சாரம் செய்து இருக்கிறோம், இவ்வளவு வேலை பார்த்து இருக்கிறோம், இவ்வளவு வாக்காளர்களை நம் வாக்காளர்களாக மாற்றிக் காட்டி இருக்கிறோம், இந்த அளவுக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று காட்டுவோம் என்கிற தைரியத்தை, அந்த வாக்குறுதியை எனக்குக் கொடுக்க வேண்டும்.
நான் மீண்டும், மீண்டும் உங்களிடம் சொல்லுவது, யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகப் பெரிய, பெரிய வாய்ப்புகள் தேடி வரும். நான் மறுபடியும் சொல்கிறேன், உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்துக்கு நான் பொறுப்பு. நாம் உழைத்துக் கொண்டு இருக்கிறோம், நம் எல்லாரையும் விட ஒரு இளைஞர் இன்னும் அதிகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். தினமும் மக்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார். யாருக்காக வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, அந்த ஒருவருக்காகவாவது நாம் அவரின் வெற்றிப்பெற்றுக் காட்ட வேண்டும். அந்த ஒருவர்தான் நம் தலைவர். சாதனைகளுக்காகவும், திட்டங்களுக்காகவாவது நாம் நிச்சயம் வெற்றிப் பெற்று காட்டுவோம். தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நம் தலைவரை வெற்றி பெறவைப்பார்கள். அந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
இளைஞர் அணிக்குக் கூடுதல் பெருமை என்னவென்றால், தலைவரின் வெற்றிக்கு நாம் பெரிய உதவியாக இருந்தோம், உறுதுணையாக இருந்தோம், தலைவரின் கரத்துக்கு நாம் வலு சேர்த்தோம் என்பதை நம் இளைஞர் அணி செய்து காட்ட வேண்டும்.
நான் மீண்டும் உங்கள் எல்லாரையும் ஒரு பதினைந்து, இருபது நாட்களில் சந்திப்பேன். அப்பொழுது இதைவிட இன்னும் எழுச்சியோடு வெற்றி நிச்சயம் இந்த இரண்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் எட்டுக்கு எட்டு என்று 100 சதவிகிதம் வெற்றிப் பெற்றுக் காட்டுவோம். இராமநாதபுரம், சிவகங்கை இளைஞர் அணி நிர்வாகிகள் இதனைச் செய்து காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தேர்தல் நெருங்க நெருங்க நிறைய கருத்துக் கணிப்புகள் வந்துவிடும். சில கருத்துக் கணிப்புகளாக இருக்கும், சில கருத்துத் திணிப்புகளாக இருக்கும். ஆனால் இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் வருகிற எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று தொடர்ச்சியாகப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கருத்துக் கணிப்பைப் பார்த்துவிட்டு நாம் வீட்டில் உட்கார்ந்துவிடக் கூடாது. நம்பிக்கை முக்கியம். ஆனால் அது அதீத நம்பிக்கையாக மாறிவிடக்கூடாது.
நம் பணி எப்படி இருக்க வேண்டும் என்றால், கருத்துக் கணிப்புகள் எவ்வளவு வெற்றி என்று போட்டிருக்கிறதோ, அதைவிட அதிகமாக நாம் வெற்றிப் பெற்று காட்ட வேண்டும். அதனை இளைஞர் அணித் தம்பிகள் நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சென்ற முறை சிவகங்கைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். இந்த முறை வெற்றிப் பெற்று காட்ட வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற முறை 100 சதவிகித வெற்றி, இந்த முறை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுக் காட்ட வேண்டும்.
எனவே அனைவரும் களத்தில் அடுத்த ஒரு மாதம் தொடர்ந்து உழைப்போம். நம் வெற்றியை உறுதி செய்வோம். மீண்டும் நம் தலைவரின் குரல் கேட்க வேண்டும். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று நம் தலைவர் அவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அதனை இளைஞர் அணி உறுதி செய்யும் என்கிற அந்த நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், என் அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கக்கூடிய அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துவிடைபெறுகிறேன்.
“வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு” நன்றி,வணக்கம்
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், சுந்தர்ராஜன், மாநகரச் செயலாளரும் துணை மேயருமான குணசேகரன், இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, கழகச் செய்தித் தொடர்புத் துணைத் தலைவர் மருது அழகுராஜ், சுபா.த.சம்பத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் நாகணி செந்தில், சம்பத் ராஜா, சண்முகம், கல்லல் அசோகன், மாவட்ட கழக நிர்வாகிகள் ஜோன்ஸ் ரூசோ, இளைஞர் அணியினர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



