திருவாடானை அருகே மணல் திருட்டு புகார்:தனிநபர் வழக்கு தொடர ஆர்டிஓவுக்கு கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை வட்டம், ஆதியூர் குரூப்,காரங்காடு கிராமத்தில் நள்ளிரவில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக சமூக வலைதள செய்தி தொடர்பாக இயற்கை வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நேற்று 18.5.2025 அன்று திருவாடானை தாசில்தார் ஆண்டி,ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் கனகராஜ் ஆகியோர் கூட்டுப் புலத்தணிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், திருவாடானை வட்டம்,ஆதியூர் குரூப், காரங்காடு கிராமத்தில் கடந்த 04.05.2026 அன்று நள்ளிரவு மணல் திருட்டு நடைபெறுவதாக வரப்பெற்ற தகவலின் பேரில் ஆதியூர் குரூப் கிராம உதவியாளர் மணல் திருட்டு நடைபெறும் இடத்திற்கு சென்ற போது மணல் அள்ள முயன்ற நபர்கள் வாகனங்களுடன் தப்பி சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டுப் புலத்தணிக்கையின்போது புல எண்.17/3 மற்றும் புலஎண்:18-ல் சுமார் 30 யூனிட் வண்டல் மண் அனுமதியின்றி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.இது தொடர்பாக பட்டாதாரர் முருகன் த/பெ கருப்பையாத்தேவர் என்பவர் மீது ஆதியூர் கண்மாய் கரையை சேதப்படுத்தியது மற்றும் அனுமதியின்றி மண் கனிமம் வெட்டி எடுத்து கொண்டு சென்றது தொடர்பாக உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஆதியூர் கிராம நிர்வாக அலுவலர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் மேற்படி பட்டாதாரர் மீது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ன்படி உரிய அபராத நடவடிக்கை மற்றும் கனிமம் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் தனி நபர் வழக்கு மேற்கொள்ள ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபீபுர் ரஹ்மானுக்கு அறிவுறுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



