கரெக்ட் ஸ்கெட்ச்:விஜிலென்ஸ் போலீசாருக்கு பாராட்டு!!!

ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் இயங்கி வரும் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வெளிப்பட்டினம் சப் ரிஜிஸ்டராக பணிபுரியும் ராமநாதன் மற்றும் புரோக்கர் அயூப்கான் ஆகியோரை பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்கெட்ச் போட்டு கைது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் விஜிலென்ஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக பணிபுரியும் ஹாலிக் அலாவுதீன் 32/26 என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 98 செண்ட் நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய வெளிப்பட்டிணம் சார் பதிவாளர் ராமநாதனை சந்தித்துள்ளார்.அப்போது பத்திர பதிவு செய்ய சார் பதிவாளர் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,வேறு வழியின்றி ரூ.3 லட்சத்தை சார் பதிவாளரின் வங்கி கணக்கிலும்,ரூ.17 லட்சத்தை அயூப்கான் என்பவரிடமும் வழங்கியுள்ளார்.இதையடுத்து கடந்த 18.05.2026 அன்று மீண்டும் பத்திர பதிவு சம்பந்தமாக சப் ரிஜிஸ்டர் ராமநாதனை சந்தித்த போது, மீதமுள்ள ரூ.25 லட்சம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.பின்னர் ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன்,அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாக அயூப்கானிடம் மற்றும் ரூ.12 லட்சம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்,ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில்,லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை அயூப்கானிடம் கொடுக்கும்போது,புதுமடம் கிராமத்தை சேர்ந்த அயூப்கான் 53/26 மற்றும் வெளிப்பட்டிணம் சப் ரிஜிஸ்டர் ராமநாதனை 59/26 கையும் களவுமாக கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதன் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு:-
ராமநாதபுரம் அடுத்த குயவன் குடியில் உள்ள நிலத்தை தனது தாய் பெயருக்கு பத்திர பதிவு செய்ய ராமநாதபுரம் சார்பதிவாளர் ரூ.3 லட்சம் கையூட்டு பெற்ற போது விஜிலென்ஸ் போலீசார் கையும்,களவுமாக பிடித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பரமக்குடி பெருமாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் சிவகங்கை மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் எமனேஸ்வரம் அடுத்த வீர பெருமாள் காலனியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



