பெருங்கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு:பாக் ஜலசந்தியை கயாக்கிங் இல் கடந்து சாதித்த குழுவினர்!!!




பெருங்கடல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வுக்காக கயாக்கிங் இல் (Kayaking) தந்தை,மகன், மகள்,நண்பர்கள் குழு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரினை கடந்து சாதித்துள்ளனர்.





பாக் நீரினை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும்.ராமேசுவரம் தீவும்,அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும்,பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி இது.

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த வழக்கறிஞர் வி.எஸ்.குமார் ஆனந்தன்.நீச்சல் வீரரான இவர் 1971ம் ஆண்டு தலைமன்னாரிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி பாக் நீரிணை கடலை முதன்முறையாக நீந்தி சாதனை படைத்தார்.

இந்நிலையில் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களில் இருந்து வெளியேறும் கழிவுகள்,மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் கழிவு வலைகளை கடலில் விடுதல்,மீனவர்கள் கடலில் வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் பெருங்கடல் மாசு அடைந்துள்ளது.
இந்த மாசு காரணமாக கடலில் வாழும் லட்சகணக்கான கடல்வாழ் உயியாழனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அழிவின் விளிம்பில் உள்ள டால்பின்,கடல் பசு,புள்ளி சுறா,ஆமை உள்ளிட்டவைகள் மீனவர்கள் வீசி செல்லும் கழிவு வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
பெருங்கடலில் ஏற்படும் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சேர்ந்த 19 பேர் கொண்ட குழுவினர் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் நீரினை கடற்பகுதியை கயாக்கிங் இல் (Kayaking) கடந்து செல்ல இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரி இருந்தனர்.
அனுமதி கிடைத்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து பயிற்சியாளர்,மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தலைமன்னாரிலிருந்து 19 பேர் கொண்ட குழு தந்தை- மகன்,தந்தை மகள் என ஜோடியாக பிரிந்து 9 காயக்கிங்யில் புறப்பட்டு,மதியம் 01.30 மணி அளவில் அரிச்சல் முனையை வந்தடைந்தார்.பாக் நீரினை 8 மணி நேரத்தில் கடந்து சாதித்து காட்டியுள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் காயக்கிங்கில் வந்த குழுவினருக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஐ.ஏ.எஸ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் மற்றும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள்,மரைன் மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



