தமிழகம்

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக சுமார் 3.1 & 4.6 கிமீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 8) முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

10-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், 11-ம் தேதி நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும் நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செமீ, உபாசி, சோலையார், சின்கோனா, நீலகிரி மாவட்டம் பந்தலூர், விண்ட் ஒர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button