இராமநாதபுரத்தில் நலிந்த பத்திரிகையாளர் என்ற போர்வையில் தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றும் நபர்:துணை போகும் பிரபல நாளிதழ் நிர்வாகம்!!!

ரிப்போர்ட்டர்ஸ் அஞ்சல்….
இராமநாதபுரத்தில் பத்திரிக்கை துறையில் உடல்நிலை சரியில்லை என விருப்ப ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஒருவர் அரசின் ஓய்வூதியம் பெற்று கொண்டு பிரபல நாளிதழ் ஒன்றில் மறைமுகமாக செய்தியாளராக பணியாற்றி கொண்டு அலப்பறை செய்து வருகிறாரே அவர் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையுமே எடுக்காதா? என ஆரம்பித்த படி இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் இருக்கும் செய்தியாளர் அறைக்குள் இருக்கும் “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபரிடம் கோர்த்தார் “அதிரடி செய்தி மாத இதழ்” நிருபர்.

முதல்ல உட்காருப்பா அது தெரியாதா? உனக்கு என தொடர்ந்த “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபர் கடந்த 10.12.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மொத்தம் 10 நபர்கள் நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள் பெற்றனர்.அதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நபர்கள் அடங்குவர்.அதில் ஒருவர் பத்திரிகை துறையில் முழுமையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அவர் அரசு கொடுக்கும் ஓய்வூதியம் ஒன்றே போதுமானது என தன்மானத்துடன் இன்னும் உற்சாகமாக பணியாற்ற முடியும் என்ற நிலையிலும் தனக்கு தானே ஓய்வு கொடுத்து எவ்வித அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் நாகரீகமாக ஒதுங்கி கொண்டார்.இன்னொருவர் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை முன்னிருத்தி இனி என்னால் பணி செய்ய முடியாது என்று விருப்ப ஓய்வு பெற்று அரசின் நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய ஆணையை பெற்ற பின்னரும்,யோக்கியன் போல் நடித்து எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதது போல் பாவணை செய்து கொண்டு மறைமுகமாக ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே அதிகார பிச்சை எடுத்து வருகிறார்.அவரை சக நிருபர்கள் கூட கண்டிப்பதில்லையாம்.மாறாக அவருக்கு உற்சாக பானம் கொடுத்து ஊக்குவித்தும் வருகின்றனராம்.

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பார்த்துக் கொள்வார்.தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து கேட்பாரற்று கிடப்பதால் நம்மை தடுக்க எவன் இருக்கான் என்ற அதிகார போதையில் அலப்பறையில் ஈடுபட்டு வருகிறார்.உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி விருப்ப ஓய்வு பெற்று அதற்கான ஓய்வூதிய ஆணையை தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து பெற்று முழுமையாக ஒரு வார காலம் கூட ஆகாத நிலையில் இப்படி எந்த நிருபர்களுமே செல்லாத இடத்திற்கு சென்று கல்லா கட்டுவதும்,போனிலேயே தொடர்பு கொண்டு செய்திகளை வாங்குவதும்,அன்பளிப்பை ஜி பே மூலம் பெறுவதும் என முகம் சுழிக்கும் செயல்களை செய்து வருகிறார்.இந்த “பூனைக்கு யார் மணி கட்டுவது” என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.அதை விட கொடுமை அரசிடம் உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி விருப்ப ஓய்வு பெற்ற அவரை பிரபல தனியார் நாளிதழ் ஒன்று இன்னும் பணியில் வைத்திருப்பதாகவும் சக நிருபர்களிடையே பேசப்பட்டு வருகிறது.உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி விருப்ப ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அரசு நன்மதிப்போடு வழங்கும் ஓய்வூதியத்தை பெற்று கொண்டு பத்திரிக்கை துறையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே விதி.ஆனால் இங்கோ “கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்பது போல மேற்படி நலிந்த பத்திரிகையாளர் தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வயிறு வளர்த்து வருகிறார் என்று முடித்தார் “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபர்.
அப்போ இவர் மீது யாருமே நடவடிக்கை எடுக்க முடியாதா? என்ற கேள்வியை தொடர்ந்தார் “அதிரடி செய்தி” மாத இதழ் நிருபர்.
ஏன் முடியாது இவ்வாறு தமிழ்நாடு அரசையும்,மாவட்ட நிர்வாகத்தையும் ஏமாற்றும் நோக்கில் சக நிருபர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருவதைப் போல மேற்படி நலிந்த பத்திரிகையாளர் செயல்பட்டு வருவது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய ஓய்வூதிய ஆணையை ரத்து செய்யலாம்.மேலும் இனி வரும் காலங்களில் அரசிடமிருந்து பத்திரிகையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற அடிப்படையில் எந்தவொரு சலுகையும் அனுபவிக்க முடியாத படி அந்த நலிந்த பத்திரிகையாளர் மீது மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடுக்கலாம்.அது போக அரசை ஏமாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த நலிந்த பத்திரிகையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டத்தில் இடம் உள்ளது.ஒரு வேளை மாவட்ட நிர்வாகம் தனது விசாரணையை தொடங்கும் போது நான் ஓய்வு பெற்று விட்டேன் அந்த பிரபல நாளிதழில் என் பொண்டாட்டி,நாத்தனார்,கொழுந்தியாள் தான் வேலை செய்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்ட வேண்டியதுதான்.அதிலும் அரசு தனது விசாரணையை தீவிரமாக்கி உட்புகுந்தால் அந்த பிரபல நாளிதழுக்கும்,நலிந்த பத்திரிகையாளருக்கும் நிறைய சட்ட சிக்கல் ஏற்படும் என்றார் “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபர்.
என்னப்பா இலை மறை காய் மறையாக பேசிட்டு இருக்க அவ்வாறு அரசை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வயிறு வளர்த்து வரும் நலிந்த பத்திரிகையாளர் மற்றும் அந்த பிரபல நாளிதழ் யாருன்னு சொல்லு என்று தொடர்ந்தார் “அதிரடி செய்தி” மாத இதழ் நிருபர்.
அட போப்பா நீ வேற இவ்வளவு சொன்னேன் அந்த பிரபல நாளிதழ் பெயரையும்,நலிந்த பத்திரிகையாளர் பெயரையும் சொல்ல தெரியாமலா?இல்லை முடியாமலா?தினசரி நாளிதழ் செய்திக்கென்று ஒரு சில வரைமுறைகள் உள்ளது.மேலும் எவன் பாவத்திலும் விழக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். “அதிரடி செய்தி” மாத இதழ் நிருபர் என்று நீ எதுக்கு இருக்க வெட்டியா இனியும் அந்த நலிந்த பத்திரிகையாளரின் அலப்பறை தொடர்ந்தால் அந்த பிரபல நாளிதழ் பெயரையும்,நலிந்த பத்திரிகையாளர் பெயரையும் போட்டோவோட போட்டு தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிச்சு ஒட்ட மாட்டியா? என்று “காலை அஞ்சல்* நாளிதழ் நிருபர் கேட்டார்.
நீ சொன்னா செய்யாமல் இருப்பேனாப்பா எல்லாத்தையும் எனக்கு ஆதாரத்தோடு கொடு.அந்த பிரபல நாளிதழ் அலுவலகம் மற்றும் நலிந்த பத்திரிகையாளர் வீடு இரண்டையும் சேர்த்து தமிழ்நாடு முழுவதும் வளைச்சு,வளைச்சு போஸ்டர் அடிச்சு ஒட்டி சோலிய முடிச்சுரேன்ப்பா என்றார் “அதிரடி செய்தி” மாத இதழ் நிருபர்.
அட அவசரப்படாதேப்பா அதுக்கு தானே “ரிப்போர்ட்டர்ஸ் அஞ்சல்” என்று ஒரு பகுதியை உருவாக்கி சொல்ல வேண்டியதை சூசகமாக சொல்லியிருக்கிறோம்.தமிழ்நாடு அரசும்,மாவட்ட நிர்வாகமும் சும்மா இருக்குமா என்ன? குறைந்த பட்சம் அந்த நலிந்த பத்திரிகையாளரையும்,பிரபல நாளிதழையும் அழைத்து வார்னிங்காவது கொடுப்பாங்கல்ல.அப்படியும் அலப்பறை அடங்கவில்லை என்றால் “திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” என்ற பழமொழியை உதாரணமாக கொண்டு உண்மை செய்தியை வெளியிட்டு,மேல் நடவடிக்கையாக நீதிமன்றத்தையும் நாடி ஓய்வு ஊதியத்திற்கு சங்கு ஊதிருவோம் என்றார் “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபர்.
ஏம்ப்பா நம்ம இரண்டு பேரும் இதை சொன்னால் அந்த நலிந்த பத்திரிகையாளருக்கும்,நமக்கும் பிடிக்காது அதான் வேலையற்று வெட்டி வேலை பார்த்துகிட்டு இருக்காங்கனு சொல்லமாட்டாங்கலா என்று கேள்வியை ஆரம்பித்தார் “அதிரடி செய்தி” மாத இதழ் நிருபர்.
அட எவன் என்ன சொன்னான் என்றால் நமக்கென்ன,என்ன நினைச்சா நமக்கென்ன நாம என்ன எதிர்கட்சி பத்திரிகையா? எல்லோரையும் விட அதிகளவில் இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் சரி,தமிழ்நாடாக இருந்தாலும் சரி அரசின் நலத்திட்டங்களை தினமும் நானும்,மாதந்தோறும் நீயும் பிரசுரித்து அரசுக்கு பிரச்சார பீரங்கியாக இருந்து வருகிறோம்.நமது எழுத்தை மாவட்ட நிர்வாகமும்,தமிழ்நாடு அரசும் கவனித்தால் போதும்.உடல்நிலை சரியில்லை என அரசின் மாதாந்திர ஓய்வூதியம் வாங்கி கொண்டு பிரபல தனியார் நாளிதழில் பணிபுரிய மட்டும் உடல்நிலை சரியாக இருக்குமா என்று தமிழ்நாடு அரசும்,மாவட்ட நிர்வாகமும் கேட்காமல் விட்டு விடுமா என்ன என்று “காலை அஞ்சல்” நாளிதழ் நிருபர் சொல்ல இருவரும் செய்தியாளர்கள் அறையை விட்டு வெளியே சென்றனர்.



