தரமற்ற நிலையில் கட்டப்பட்ட நியாய விலை கடை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம்!!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டப்பட்ட நாளிலிருந்து தரமற்ற நிலையில் இருப்பதாலும், கூட்டுறவுத் துறைக்கு முறையாக அந்த கட்டிடத்தை வழங்காததை கண்டித்தும், அந்த நியாய விலைக் கடையை தரமான முறையில் கட்டி, கூட்டுறவுத்துறைக்கு உடனடியாக வழங்க வேண்டும் என சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த தீக்கதிர் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் அ.முத்துமணி கூறியதாவது:-
ஏனாதி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நியாயவிலை கடை கட்டப்பட்டு கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்க முயன்ற பொழுது கூட்டுறவுத்துறை நிர்வாகிகள் தரமற்ற நிலையில் கட்டிடங்கள் இருப்பதால் இந்த கட்டிடத்தை நாங்கள் பெற மாட்டோம் என்றும் முறையாக பணிகளின் நிறைவடைந்த பிறகு எங்களிடம் கட்டடத்தை கொடுத்தால் மட்டுமே இந்த கட்டிடத்தை நாங்கள் பெற்றுக் கொண்டு மின் கட்டண வைப்புத் தொகையை செலுத்துவோம் என்று கூறி விட்டார்கள். பலமுறை கிராம சபை கூட்டத்தில் தொடர்பாக கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏனாதி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையை தரமாக கட்டி தர வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதேபோல ஏனாதி செயலர் ஏனாதி கிராமத்திற்கு வருவதே இல்லை அவருக்கு பதிலாக அவர் மனைவி தான் ஏனாதி செயலர் வேலையை செய்து வருகிறார் இதை கண்டித்து நான் கண்டன தீர்மானத்தை முன்மொழிந்த போது அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பிரதிநிதி அரசு அலுவலருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முடியாது என கூறிவிட்டார் கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிக்கு எதிராக தீர்மானம் ஏற்றக்கூடாது என்ன கூறினார். என் அறிவுக்கு எட்டிய வரை இது போன்ற எந்த விதியும் இல்லை என நினைக்கிறேன். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு ஏனாதி சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு வருகை புரியாத ஏனாதி கிராமச் செயலர் மற்றும் ஏனாதி கிராம சபை கூட்டத்திற்கு தவறாக வழிகாட்டிய அந்த அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றும், இந்த சிறப்பு கிராம கூட்டத்திற்கு மொத்தம் வருகை தந்தவர்கள் மொத்தம் 20 நபர்கள் கூட இல்லை இந்த நிலையில் அந்த கிராம சபை கூட்டம் நடத்துவது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை என தெரிவித்தார்.



