தமிழகம்மாவட்டச் செய்திகள்

717 டாஸ்மாக் கடைகள் மூடல்:மக்கள் நலனா? மதுக்கூட மாஃபியாக்களுக்காக அதிகாரிகளின் ஆதரவா?

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று மூன்றே நாட்களில் 717 மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும்,இதன் பின்னணியில் முந்தைய ஆட்சியாளர்களிடம் பலன் பெற்ற அரசு அதிகாரிகளின் “உள்நோக்கம்” கொண்ட சதி இருக்கலாமோ? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்று 72 மணி நேரத்திற்குள் 717 கடைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு பட்டியல் தயார் செய்தது எப்படி? மாநிலம் தழுவிய முறையான ஆய்வை இவ்வளவு குறுகிய காலத்தில் நடத்துவது சாத்தியமற்றது.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டுப்படி, “முந்தைய ஆட்சிக் காலத்தில் சில குறிப்பிட்ட மதுபான பார் உரிமையாளர்களிடம் ஆதாயம் பெற்ற அதிகாரிகள்,அவர்களுக்குப் போட்டியாக இருக்கும் அரசு கடைகளை மட்டும் மூடுவதற்கு இந்தப் பட்டியலைத் தயாரித்து புதிய அரசிடம் வழங்கியிருக்கலாம்” என்று கருதப்படுகிறது.

தி.மு.க காலத்து ‘Elite’ பார்களுக்கு சிவப்புக் கம்பளம்?:-

கடந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், விதிகளைத் தளர்த்தி ஏராளமான சொகுசு பார்களுக்கு (FL-2) உரிமங்கள் வாரி வழங்கப்பட்டன. தற்போது மூடப்படும் 717 அரசு கடைகளில் பெரும்பாலானவை, இந்தத் தனியார் பார்களுக்கு மிக அருகாமையில் இருப்பவை எனத் தெரிகிறது.

முந்தைய ஆட்சியில் தாங்கள் பெற்ற கைமாற்றுக்காக,தற்போதைய அரசைத் தவறாக வழிநடத்தி, தனியார் பார்களின் லாபத்தை உயர்த்த அதிகாரிகள் இந்தத் திட்டத்தைப் போட்டுக் கொடுத்துள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசுக்கு இந்த உள்விவகாரங்கள் தெரிய வாய்ப்பில்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, அதிகாரிகள் உண்மையை மறைத்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கள்ளச்சந்தை மற்றும் ‘சில்லிங்’ விற்பனை:-

அரசு கடைகளை மூடுவதன் மூலம் மது ஒழிப்பு நடப்பதாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளூர் புள்ளிகளின் ஆதரவுடன் பெட்டிக்கடைகளிலும் வீடுகளிலும் நடக்கும் ‘சில்லிங்’ விற்பனை குறித்து அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன்? கடைகளை மூடுவது கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களுக்குக் கூடுதல் லாபத்தையே ஈட்டித் தரும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மக்களின் கோரிக்கை:மீண்டும் ஒரு கள ஆய்வு தேவை:-

அரசு அதிகாரிகள் கொடுத்த பட்டியலை அப்படியே ஏற்காமல்,தற்போதைய அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடப்படும் அரசு கடைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் எத்தனை தனியார் FL-2 பார்கள் உள்ளன என்பதை அரசு நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

தவறான அல்லது ஒருதலைப்பட்சமான பட்டியலைத் தயாரித்துக் கொடுத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மூடப்படும் கடைகளின் விவரங்களையும், அதன் அருகில் செயல்படும் தனியார் பார்களின் உரிமையாளர்கள் யார் என்பதையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

மக்களின் ஓட்டுகளைப் பெற்று அரியணை ஏறிய புதிய அரசுக்கு, அதிகார வர்க்கத்தின் இத்தகைய தந்திரங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த முடிவு மது ஒழிப்பிற்குப் பதிலாக, சில குறிப்பிட்ட “பார் மாஃபியாக்களின்” கல்லாவை நிரப்பவே உதவும். முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அறிக்கையை மட்டும் நம்பாமல்,ஆழமான கள ஆய்வின் மூலம் உண்மையான மக்கள் நலன் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

✍️ இணை ஆசிரியர்:பனைக்குளம் அ.நூருல் அமீன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button