தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து!!!

தமிழக மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையை பெற்று, தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச்செயலாளர் முருகேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.கடந்த 23 ஆண்டு காலமாக போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு (TET)தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.காலை உணவு திட்டத்தை விரிபடுத்தி ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒப்பந்த முறையில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள்,வட்டார வள மையத்தில் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பழைய முறைப்டியே வழங்க வேண்டும்.முதுகலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பள்ளியில் பயின்று மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விச் சேர்க்கையில் தற்போது பின்பற்றி வரும் 7.5. சதவீதத்தை, 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விச் சேர்க்கையில் 2.5சதவீதம் வழங்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதியக் குழுவை அமுல்படுத்தியுடன்,தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அமுல் படுத்த வேண்டும்.பதவி உயர்வு கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும், பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மையுடன் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளையும்,இன்னும் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



