பத்திரப்பதிவு டூ போக்குவரத்து.. அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்.. தவெகவில் யாருக்கு ஜாக்பாட்?

தமிழ்நாட்டின் தவெக ஆட்சி அமைந்து ஒரு வாரமாகிவிட்ட சூழலில், 9 அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், இன்னும் முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது. அது எந்தெந்த துறைகள் என்பதையும், அதற்கான காரணம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பின் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்திருக்கிறது. சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் அதிமுகவில் எஸ்பி வேலுமணி பக்கம் இருக்கும் 25 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது, அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஒரு வாரமாகியும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சுமார் 3 ஆயிரம் கோப்புகள் தேக்கம் அடைந்த நிலையில், இலாகா ஒதுக்கீடு செய்யாதது விவாதமாகியது. இந்த நிலையில் அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன இலாகா என்ற அறிவிப்பு இன்று வெளியானது.
அதன்படி முதல்வர் விஜய் வசம் பொதுத்துறை, காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு, சிறப்பு திட்ட செயலாக்கம், இளைஞர் நலன், மகளிர் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் உள்ளது. நிதித்துறை செங்கோட்டையன் வசமும், சுகாதாரத்துறை அருண்ராஜ் வசமும், நீர்வளத்துறை புஸ்ஸி ஆனந்த் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு ஆகியவை ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில்துறையும், அமைச்சர் பிரபுவுக்கு கணிம வளத்துறையும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தகவல் மற்றும் விளம்பரத்துறையும், அமைச்சர் வெங்கடராமனுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முக்கியத் துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பால்வளத்துறை, கைத்தறி மற்றும் காதி, கூட்டுறவுத்துறை ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, வீட்டுவசதித் துறை, உயர்கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் முக்கியமான இந்த துறைகள் யாருக்கு யாருக்கு வழங்கப்படும் என்ற விவாதம் தவெக எம்எல்ஏ-க்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.



