இணைதளம் மூலம் விண்ணப்பிக்க ராமநாதபுரம் கலெக்டர் அழைப்பு!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி / பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள ( நீர்நிலை) கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் ஆகியவைகளில் விவசாயப் பணி மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு வண்டல்/களிமண் எடுத்துக்கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விவசாய பயன்பாட்டிற்கு நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீ மிகாமலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றிற்கு 90 க.மீ மிகாமலும், வண்டல் மண் எடுக்க இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை அனுமதி வழங்கவும், மண் பாண்ட தொழில் செய்பவர்களுக்கு 60 க.மீட்டருக்கு மிகாமல் களிமண் எடுத்துக்கொள்ள வட்டாட்சியர் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நேர்வில்,ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி / பஞ்சாயத்து ராஜ் பராமரிப்பில் உள்ள ( நீர்நிலைகள்) கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் ஆகியவற்றில் விவசாயப் பணி / மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல் / களிமண் எடுப்பதற்கு தகுதியான 1305 கண்மாய் / ஊரணிகளுக்கான விபர பட்டியல் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறப்பட்டு மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு (சிறப்பிதழ்) எண் 12, நாள் 19.04.2025-ன் படி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் கூடுதலாக ஊரகவளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதிவாய்ந்த நீர்நிலைகளின் விபரங்கள் பெறப்பட்டு ஓரிரு தினங்களில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.
எனவே, விவசாயிகள் / மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல் / களிமண் எடுக்க மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ள கண்மாய் / ஊரணிகளில், தங்கள் வட்டத்திற்குட்பட்ட கண்மாய் / ஊரணிகளுக்கான விபரங்களுடன் இ.சேவை மையத்தில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



