பெருங்குளம் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு:முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை நிர்வாகிகள் வழங்கினர்…!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் யூனியன்,பெருங்குளம் கிராம முஸ்லிம் ஜமாத்தார்கள் நிர்வாக சபை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் காரணமாக பொதுமக்களுக்கு நாளுக்கு நாள் பெரும் இடையூறுகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.மதுக்கடைக்கு வரும் மது பிரியர்கள் தங்கள் வாகனங்களை முறையற்ற இடங்களிலும் குடியிருப்பு வாசல்களிலும் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசர ஊர்திகள் கூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.மது போதையில் தினமும் தகராறு செய்வது,கூச்சலிடுவது,சில கொலை முயற்சி சம்பவங்கள் என பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பள்ளி மாணவ,மாணவிகள் அப்பகுதி வழியாக நிம்மதியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.கடைக்கு வரும் மது பிரியர்களால் அப்பகுதி வழியாக பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பெண்கள் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.மதுக்கடைக்கு அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி 400 மீட்டர் தொலைவிலும்,ரெட் கிராஸ் மருத்துவமனை 100 மீட்டர் தொலைவிலும்,கோயிலும் உள்ளதால் இவ்வழியாக பயணிக்கும் பாதசாரிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் 100 மீட்டர் மற்றும் நதிப்பாலம் பேருந்து நிறுத்தம் அருகில் மதுக்கடை உள்ளதால் இவ்வழியாக வரும் பொதுமக்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்த மதுக்கடைக்கு எதிரே ஆண்கள் குளிக்கும் ஊரணி உள்ளது.அந்த ஊரணியில் மதுப்பிரியர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்கள் உடைந்து கிடப்பதால் பொதுமக்கள் குளிப்பதற்கு இடையூறாக உள்ளது.மேலும் இந்த மதுக்கடை வழியாக மது போதையில் வரும் வழிப்போக்கர் ஒருவரும் உயரிழந்துள்ளார்.எனவே எங்கள் பகுதி மக்களின் அடிப்படை அமைதியையும்,பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தாங்கள் உடனடியாக நேரடி ஆய்வு செய்து மதுபானக்கடையை (எண்:6995) அங்கிருந்து முற்றிலும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



