தமிழகம்மாவட்டச் செய்திகள்

மன உறுதியும்,தன்னம்பிக்கையும் பெற்றவர்கள் மாற்றுத்திறனாளிகளே:அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் புகழாரம்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் தலைமை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளிடம் மனுக்கள் பெற்ற அமைச்சர் பேசியதாவது:-

இக்கூட்டத்தின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் முழுமையாக கிடைக்கப்பெறுவது என்பதே ஆகும்.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கையான மருத்துவ சான்று வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதே போல் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததற்கிணங்க சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு மருத்துவர்கள்,பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுவாக மாற்றுத்திறனாளிகள் எப்பொழுதும் மன உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் ஆவார்கள். ஆகவே இந்த அரசு உங்களின் கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து உரிய நலத்திட்டங்களை சென்றடையச் செய்வதுடன் மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800/- வீதம் ரூ.9,16,200/- மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் வாகனங்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ வ.சங்கரநாராயணன்,கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button