ராமநாதபுரத்தில் த.வெ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி த.வெ.க அரசை கண்டித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பழைய ஏர் கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாநில கெளரவ தலைவர் மிக்கேல் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மரகதவேல்,கமுதி ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாகன ஓட்டுநர் அணி செயலாளர் இளவரச பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கண்டன உரையாற்றினார்.தென்னிந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அர்ச்சுணன்,வைகை விவசாயிகள் சங்க தென்மாவட்ட தலைவர் மதுரை வீரன்,பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சின்னத்தம்பி,சோழந்தூர் பாலகிருஷ்ணன்,காவேரி வைகை குண்டாறு கிருதுமால்நதி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி,அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்கள் வீரமணி,முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு த.வெ.க அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞரணி நிர்வாகி கணபதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி விவசாயிகளின் அனைத்து பயிர்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளை ஏமாற்றமால் அறிவித்த படி பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்டன முழக்கமிட்டனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் “CM சார் CM சார்” விவசாயிகள் உங்கள் தேர்தல் அறிக்கையை நம்பித் தானே ஓட்டு போட்டோம் என ரைமிங்கில் கோஷமிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள முழுமையான அசல் + வட்டி பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்திட தமிழக அரசுக்கு உடனடி பரிந்துரை வழங்க வேண்டும்,தள்ளுபடி அறிவிக்கும் வரை கூட்டுறவு சங்கங்களின் கடன் வசூல் நோட்டீஸ்,நில ஜப்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்,தள்ளுபடிக்குப் பின் விவசாயிகள் மீண்டும் புதிய பயிர் கடன் பெற சிபில் கடன் தகுதி தடை இல்லாமல் வழிவகை செய்ய வேண்டும்,பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு முழுமையாகவும்,விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரனிடம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும் இந்த மனுவை தமிழக முதல்வர்,ஒத்துழைப்புத் துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு பதிவாளர் ஆகியோருக்கு அனுப்பி விவசாயிகளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.



