பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:தமிழக அரசுக்கு தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!!

தமிழக அரசுப்பணியில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச்செயலாளரும்,ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2003ம் ஆண்டிற்கு முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாத ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்குப் பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள்.2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசுப் பணியில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர்களும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர்.புதிய பென்சன் திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிரான திட்டம், ஏன் என்றால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள், சேமித்த தொகையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையை முன் பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் மாதத் தவனையில் திருப்பி செலுத்தலாம். இந்த முறையானது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது. பணி ஓய்வுக்குப் பிறகுதான் சேமித்த தொகையை பெறமுடியும். இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.மேற்படி குடும்ப செலவுகளுக்கு தனியார்களிடம் வட்டிக்கு பணம் பெற வேண்டிய நிலையும் இருக்கிறது.இப்படிப்பட்ட நெருக்கடியில் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராட்டத்தை தொடங்கும் போதெல்லாம்,ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்புக்களின் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு பல முறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுகிறோம் என்ற உத்தரவாதத்தையும் அன்றைய முதலமைச்சர் கொடுத்தார்.ஆனால், ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்புக்கள் அரசு முன் வைத்த 10 கோரிக்கைகளில், ஒன்றைக் கூட அரசு நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியின் கடைசி நேரத்தில் அன்றைய முதலமைச்சர் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்காமல், ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகள் அவசரப்பட்டு முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் சம்மந்தமாக எந்தவித செயல்முறைகளும், வழிமுறைகளும் வெளியிடாத நிலையில், அரசு அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்றி விட்டது போல், ஜாக்டோ-ஜியோவிலுள்ள ஒரு சில மாநில நிர்வாகிகள் அன்றைய அரசுக்கு நல்லவராக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்த அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தினர். நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியதால், ஆசிரியர் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் மீது வருத்தத்தில் இருந்த ஆசிரியர் அரசு ஊழியர்கள் சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.தனக்கான நீதி ஆளும் அரசுகளிடம் கிடைக்வில்லையெனில்,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மௌனம் காத்து, அடுத்து வரும் தேர்தலில் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவர்களின் குணம். இது காலம் காலமாக நடந்து வருகிறது.கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் செயல்முறைகள் வெளியிடப்படாததால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் அரசு ஊழியர்கள் TAPS திட்டத்தின் பணப்பலன்களை பெறமுடியாமலும், CPS திட்டத்தின் பணப் பலன்களை பெறாமலும் தவித்து வருகின்றனர்.இன்று, ஒரு புதிய சகாப்தத்தை படைத்து, நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கனிவு கூர்ந்து, முந்தய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துமாறு, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



