ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை,எளிய மாணவ,மாணவிகளின் கல்வியை தொடர உதவி:தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் 100% சேருவதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ,மாணவியர்களில் சிலர் பொருளாதார காரணங்களால் உயர்கல்வியை தொடர முடியாத சூழல் உள்ளது.தமிழ்நாடு அரசின் சார்பில்,கல்வியை தொடர முடியாத மாணவர்களின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டும், அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவ்வாறு பொருளாதார காரணத்தினால் கல்வியை தொடர முடியாத மாணவ,மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள்,நன்கொடையாளர்கள் அவ்வாறு சிரமப்படும் மாணவ, மாணவியர்களுக்கு பொருள் உதவியாகவோ அல்லது கல்விக்கட்டணமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்களின் விருப்பங்கள் கோரப்படுகின்றன.எனவே விருப்பமுள்ள நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 04567-228016, 04567-228021 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 98948 25860, 99433 35196 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலரை நேரில் சந்தித்தோ தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ,மாணவிகளின் கல்வியை தொடர்வதற்கு உதவி புரிந்திட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



