தமிழகம்மாவட்டச் செய்திகள்

அரசு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற செய்க:இந்திய ஜனநாயக கட்சி மனு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கூடநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ளிக்கூட்ரோடு வெற்றி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை கிராமத்தின் மையப்பகுதியில், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, மதுபிரியர்கள் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து மது அருந்துவதோடு, காலி மது பாட்டில்களை உடைத்து சாலையோரங்களில் வீசிவிட்டு அப்பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தினமும் பயத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த டாஸ்மாக் கடையை மக்கள் வசிப்பிட பகுதிகளில் இருந்து அகற்றி வேறு பொதுமக்களுக்கு யாருக்கும் இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் 10 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.) மாவட்ட தலைவர் பாபாஜி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மக்கள் குறை தீர்வு நாள் திங்கட்கிழமை கூட்ட அரங்கில் நேரில் சந்தித்து டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி புகார் மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button