ராமேசுவரத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.72.18 லட்சம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரங்கள்:அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன்,மாவட்ட கலெக்டர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தலைமையேற்று 28 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் ரூ.72.18 லட்சம் மதிப்பீட்டில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உட்பொருத்தும் / வெளி பொருத்தும் இயந்திரங்களை வழங்கியதுடன், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் 28.02.2026ல் மீன் பிடிக்க சென்ற போது தவறி விழுந்ததையொட்டி,மீனவர் குடும்பத்துக்கு ரூ.2,00,000/-க்கான காசோலையினை வழங்கினார். தொடர்ந்து மீனவர்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பாம்பன் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 12 மீனவர்களின் குடும்பத்துக்கு சென்று ஆறுதல் கூறியதுடன்,சிறையில் இருந்து விடுவித்து கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதிக்கு சென்று தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



