ராமநாதபுரம் – நயினார்கோவில் தடம் எண் 15 அரசுப் பேருந்து சரியான நேரத்திற்கு இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!

ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து நயினார்கோவில் வரை இயக்கப்படும் தடம் எண் 15 அரசுப் பேருந்து,முறையான கால அட்டவணையின்படி இயக்கப்படாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் தன்னிச்சையான நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப்புறப் பகுதிகளை இணைக்கும் முக்கியப் பேருந்தாக தடம் எண் 15 அரசுப் பேருந்து விளங்கி வருகிறது. இந்த பேருந்தானது காலை முதல் இரவு வரை அதற்குரிய சரியான நேரக் கட்டுப்பாட்டுடன் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து நயினார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெகன் கூறியதாவது:-

“இந்த பேருந்து தடம் எண் 15 காலை முதல் இரவு வரை ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சொந்த விருப்பத்திற்கேற்ப,அவர்கள் நினைக்கும் நேரங்களில் இயக்கப்படுகிறது.உதாரணமாக, மாலை 5:30 மணிக்கு அரண்மனை பேருந்து நிறுத்தத்திலிருந்து கிளம்பி, மாலை 6:30 மணிக்கு நயினார்கோவிலை வந்தடைய வேண்டும்.ஆனால்,எந்த ஒரு நாளும் இப்பேருந்து உரிய நேரத்தில் வருவதில்லை.பேருந்துகளைக் கண்காணிக்க வேண்டிய நேரக் காப்பாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் தங்களது கடமைகளில் கவனம் செலுத்துகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.இது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்பேருந்தை நம்பி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்,அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணித்து வருகின்றனர்.பேருந்து சரியான நேரத்திற்கு வராததால்,காலை வேளையில் மாணவர்கள் பள்ளிக்கு நேரத்தோடு செல்ல முடியாமலும்,மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் நீடித்து வருகிறது.எனவே,பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தடம் எண் 15 அரசுப் பேருந்தை தினசரி கால அட்டவணையின்படி சரியான நேரத்தில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



