தேவர் குருபூஜை விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று தினங்கள் முத்துராமலிங்கத் தேவர் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. மேற்படி குருபூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் இருக்கும் வகையில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்,இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 163 BNSS தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில்,28.10.2025, 29.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில்,மேற்படி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள்/சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும்,வாடகை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 28.10.2025, 29.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் வெளி மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு அரசு,தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் வர அனுமதி கிடையாது.மாறாக மதுரையில் இருந்து வரும் அனைத்து அரசு,தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி,சிவகங்கை,காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,தேவிபட்டிணம் வழியாக இராமநாதபுரம் வர வேண்டும்.மேற்படி நாட்களில் இராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அரசு,தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இராமநாதபுரம்,தேவிபட்டிணம், ஆர்.எஸ்.மங்கலம்,திருவாடானை, சருகனி,காளையார்கோவில், சிவகங்கை,பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு செல்ல வேண்டும்.மேலும் குருபூஜைக்கு வருபவர்களின் வசதிக்கென தேவைப்படும் கிராமங்களிலிருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்புறத்தில் தொங்குவது, மேற்கூரையில் அமர்வது,வெடி வெடிப்பது போன்ற விதிமீறல்களிலும் ஈடுபடக்கூடாது. மேலும் குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு,சமுதாய ரீதியிலான கோஷங்களை எழுப்பக்கூடாது.இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன்னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 163 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள்ளும் பிரத்யேக கேமராக்கள் பேருந்துகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.மேலும் பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,பசும்பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 150 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கர மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



