தமிழகம்மாவட்டச் செய்திகள்

நாளை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் விழா:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30.10.2025 அன்று காலை 9.30 மணியளவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.அதே நேரத்தில், சென்னை, அண்ணா சாலை, நந்தனம் சந்திப்பில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அமைந்துள்ள பசும்பொன் திருவுருவச்சிலைக்கு 30.10.2025 அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துவார்கள்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உக்கிரப்பாண்டி தேவர் – இந்திராணி தம்பதியினர் மகனாக 30.10.1908 அன்று பிறந்தார். சிறு வயதிலேயே பெற்ற தாயினை இழந்தார்.பின்பு,இஸ்லாமியத் தாய் ஆயிஷா பீவி அம்மாள் வளர்க்கப்பட்டார். இதனால் இஸ்லாமிய மக்களிடையே அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.தமது சிறு வயது முதல் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார்.அந்நிய நாட்டின் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக இருந்ததைக் கண்ட தேவர் பெருமகனார்,அம்மக்களின் வாழ்வு மேம்படத் தம்மையே அர்ப்பணிக்கத் தொடங்கினார்.1933ஆம் ஆண்டு முதன் முறையாக, சாயல்குடியில் உள்ள விவேகானந்தர் வாசக சாலையில் எவருமே எதிர்பாராத வகையில்,சுவாமி விவேகானந்தரைப் பற்றி மூன்று மணிநேரம் ஆற்றிய சொற்பொழிவே தேவர் பெருமகனாரின் பொதுவாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட,சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு, தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பினார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல மணி நேரம் உரையாற்றிடும் தேவர் திருமகனார் அவர்கள் இஸ்லாமிய மக்கள் மீது,அளவற்ற பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த காரணத்தினால்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்கள் தம் தாய்த் தமிழகத்தை விட்டுப்போக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.1920 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி,அச்சட்டத்தினை அகற்றினார். 1937ஆம் ஆண்டு நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து,1939 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியை நிறுவி,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.மேலும், “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.1952-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.பின்னர் நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அடித்தட்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதன் மூலம், அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றார்.தேசியமும்,தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீரமுழக்கமிட்ட பசும்பொன் தேவர் திருமகனார் ஆன்மீகம்,தேசியம்,பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு,சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தமது வாழ்நாளில் இறுதிவரை பின்பற்றினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் கொண்டிருந்தார்.ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானம்,ஆன்மீகச் சொற்பொழிவு இவற்றால் தேவர் “தெய்வத் திருமகன்” என்று போற்றப்பட்டார். இப்படி அரசியலிலும், ஆன்மீகத்திலும் பெருமைக்குரியவராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 30.10.1963 அன்று மறைந்தார்.2007 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து,இராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புனரமைக்கப்பட்டு நூற்றாண்டு தோரண வாயில் அமைக்கப்பட்டு,புகைப்படக் கண்காட்சிக் கூடம்,அணையா விளக்கு, புதிய நூலகக் கட்டடம். முளைப்பாரி மண்டபம்,முடி காணிக்கை மண்டபம் அமைக்கப்பட்டன.முத்தமிழறிஞர் கலைஞர்,தேவர் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் நெல்லை மாவட்டம் மேல்நீலித நல்லூர்,இராமநாதபுரம் மாவட்டம் கமுதி,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் அரசு கல்லூரிகள்,மதுரை மாநகரில் மிக உயரமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முதலியவற்றை அமைத்துத் தேவர் பெருமகனாருக்குப் பெருமை சேர்த்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில், தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் புதிதாக அமைத்து 28.10.2024 அன்று திறந்து வைத்து சிறப்பித்தார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததும்,மறைந்ததும் அக்டோபர்த் திங்கள் 30-ம் நாள் ஆகும்.எனவே, தேவர் திருமகனாரின் ஜெயந்தியும், குருபூஜையும் பசும்பொன்னில் ஒரே நாளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button