இராமநாதபுரத்தில் நடைபெறும் கலைத்திருவிழாவில் மாணவ,மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனையாளர்களாக வேண்டும்:அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியில் கல்லூரியில் இன்று (31.10.2025) பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா-2025 துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வியை தனது இரு கண்களாக நினைத்து அதிகளவில் நிதி ஒதுக்கீடு வழங்கி மாணவ,மாணவிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.காரணம் ஒவ்வொரு மாணவ,மாணவிக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத சொத்தாக இருந்து வரக்கூடியவை கல்வி ஒன்றுதான். அதை மாணவ,மாணவிகள் உரிய பருவத்திலேயே சரியாகப் பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமும்,எண்ணமும் ஆகும்.அந்த வகையில் கல்வியை சிறப்புடன் கற்கும் மாணவ,மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்ந்து தங்கள் திறமைகளையும் வளர்த்து அதன் மூலமாகவும் தங்கள் சாதனையாளர்களாக வரவேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ,மாணவிகளுக்கு கலைத் திருவிழா நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டு 4 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் இந்தாண்டு கலைத் திருவிழா நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.இதன் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி திறனுடன் சேர்ந்து பிற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்பதே ஆகும்.அதன்படி ஓவியம்,இசை,நுண்கலை,பாடல்,நாட்டியம்,நாடகம் என 46 வகையான கலைகளை கற்று அதன் மூலம் மாணவ,மாணவிகள் தங்கள் திறன்களை மேம்படுத்தி சாதனையாளர்களாக வரவேண்டும் என்ற நோக்குடன் இவ்விழா நடைபெறுகிறது.இதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறுகின்ற வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டியில் இந்த ஆண்டு 2212 மாணவ,மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன.பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் அதிகளவில் மாணவ,மாணவிகள் பங்கேற்க வேண்டும்.தற்பொழுது மாவட்ட அளவில் நடைபெறுகின்ற போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர்.கலை மற்றும் பண்பாட்டை போற்றி பாதுகாப்பவர்கள் தமிழர்கள் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சரால் ஆண்டுதோறும் இவ்விழா துவங்கப்பட்டு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலைச்செல்வன் என்ற விருதும்,மாணவிகளுக்கு கலையரசி என்ற விருதும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.இதுபோன்ற விருதுகளை மாவட்டத்தில் உள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சா.புகாரி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ்,இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,மாவட்ட கல்வி அலுவலர்கள் சேதுராமு,ஜெய்சங்கர்,ஜெயந்தி,நேர்முக உதவியாளர்கள் கர்ணன்,ஆரோக்கியதாஸ்,முஹம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் முதல்வர் முனைவர்.சோமசுந்தரம்,முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பரணி,உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை முனைவர்.கணேச பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



