தமிழகம்மாவட்டச் செய்திகள்

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கட்டி உருண்ட தி.மு.க கவுன்சிலர்கள்:தொடர் கூச்சல்,குழப்பத்தால் கட்சியும்,நகராட்சியும் நாற்றமாய் நாறுகிறது:வேதனையில் கழக உடன்பிறப்புகள்!!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி என்றாலே உலகம் முழுவதும் தெரியும் ஒரு பிரபலமான இடம்.மொத்தம் 23 வார்டுகள் இருக்கும் இந்த கீழக்கரை நகராட்சியில் ஆளும் தி.மு.கவைச் சேர்ந்த பை.செஹானஸ் ஆபிதா சேர்மனாக பதவி வகித்து வருகிறார்.

இதில் 13 கவுன்சிலர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்.மீதமுள்ள 10 கவுன்சிலர்கள் பிற அரசியல் கட்சிகளையும்,சமுதாய அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.ஊழலுக்கு பெயர் போன இந்த கீழக்கரை நகராட்சியில் அவ்வப்போது சர்ச்சைகள் ஏராளமாக எழுவதுண்டு.அதன் உச்சமாகத்தான் நகராட்சியில் குப்பை அள்ளும் அனுமதியை யாருக்கு கொடுத்துள்ளீர்கள் என்று நகராட்சி அலுவலகத்திற்குள்ளேயே சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா அறையில் தரமான ஒரு சண்டைக் காட்சி அரங்கேறியுள்ளது.அனைத்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் ஷேக் உசேன் நகராட்சியில் குப்பை அள்ளும் பணியை எந்த நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கவுன்சிலர் சர்ஃப்ராஸ் நவாஸ்

கவுன்சிலர் சேக் உசேனுடன் சென்ற தி.மு.க கவுன்சிலர் சஃர்ப்ராஸ் நவாஸ் மற்றும் அவரது அண்ணன் கீழக்கரை நகர் துணைச்செயலாளர் ஜெய்னுதீன் ஆகியோர் கவுன்சிலர் கேட்டால் பதில் சொல்லுங்கள் சார் எதற்காக மிரட்டுகிறீர்கள் என அவரைப் பார்த்து கேட்க உடனே அருகில் இருந்த மற்றொரு தி.மு.க கவுன்சிலர் மீரான் தலையிட்டு சர்ப்ஃராஸ் நவாஸ் மற்றும் ஜெய்னுதீனிடம் வாக்குவாதம் செய்ய இறுதியில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா…

சுகாதார ஆய்வாளர் அறைக்குள்ளேயே ஒருவருக்கொருவர் இழுத்து போட்டு மல்லுக்கட்டிக் கொண்டது குறித்து கீழக்கரை நகர் முழுவதும் நாறி நமங்குலைந்து விட்டது.ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த கவுன்சிலர் மீரான் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.

கீழக்கரை தி.மு.க நகர் துணைச்செயலாளர் ஜெய்னுதீன்….

உடனே நீங்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என பரிந்துரைத்துள்ளனர்.உடனே கீழக்கரை நகராட்சி சேர்மன் செஹானஸ் ஆபிதாவின் அண்ணனான நிழல் சேர்மன் இப்திஹார் ஹசன்,அவரது எடுப்பு கவுன்சிலர் முஹம்மது சுகைபு ஆகியோர் அவர்களது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாக்குதலுக்குள்ளான கவுன்சிலர் மீரானை கொண்டு சேர்த்தனர்.

தாக்குதலுக்குள்ளான கவுன்சிலர் மீரான்…

இதற்கிடையில் இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவுக்கு கவுன்சிலர்கள் கட்டி உருண்ட தகவல் போகவே,கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அஹமதுவை தொடர்பு கொண்டு என்ன நடந்ததென்று விசாரிக்க ஆரம்பித்துள்ளார்.அதற்கு அவரோ அண்ணணும்,தம்பியும் எவ்வளவு சொன்னாலும் அடங்க மாட்டேங்குறாங்க.

கீழக்கரை தி.மு.க நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் (நிழல் சேர்மன்)…

கவுன்சிலர் சஃர்ப்ராஸ் நவாஸ் கட்சியில் பதவி வேண்டும் என்பதற்காக கீழக்கரையில் கட்சியை நாசம் செய்து வருகிறார்.வேண்டுமென்றே அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர் சேக் உசேனை தூண்டி விட்டு இந்த பிரச்சினையை கிளப்பியது மட்டுமின்றி நமது கட்சி கவுன்சிலரையே கந்தலாக்கி ஆஸ்பத்திரியில் படுக்க வச்சுட்டாங்க என புலம்ப சரி சரி பேசி சமாதானம் பண்ணுங்க என்று மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நகர் செயலாளர் பஷீர் அஹமதுவிடம் சொல்லி முடிப்பதற்குள் கீழக்கரை காவல்நிலையத்தில் இருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த போலீசார் தாக்குதலுக்கு ஆளான கவுன்சிலர் மீரானிடம் வாக்குமூலம் பெற்று தாக்குதல் நடத்திய கவுன்சிலர் சர்ப்ஃராஸ் நவாஸ் மீதும்,நகர் தி.மு.க துணைச்செயலாளர் ஜெய்னுதீன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் நடந்து வரும் கீழக்கரை நகராட்சியில் 100-க்கு 99% கமிஷனை பங்கு பிரிப்பது தொடர்பாகத்தான் அதிகளவில் நடப்பதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.இதற்கு மூல முதற் காரணமாக இருப்பது கீழக்கரை நகராட்சி சேர்மன் செஹானஸ் ஆபிதாவின் அண்ணனான நிழல் சேர்மன் இப்திஹார் ஹசன் என்பவர்தானாம்.கவுன்சிலர் கேட்டதற்கு பதில் கொடுத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.மதிய நேரத்தில் அரசு அலுவலகத்தில் அதுவும் சுகாதார ஆய்வாளர் அறைக்குள்ளேயே சேர்மன் கண்ணெதிரே இரண்டு கவுன்சிலர்களும் சண்டை போட்டது எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க தேவையானதை நிழல் சேர்மன் இப்திஹார் ஹசன் கச்சிதமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.நம்ம காதுக்கு வந்ததும் களம் இறங்கி விசாரணையை துவங்கி விசாரணையில் ஆதாரத்துடன் கிடைத்த தகவலை அம்பலப்படுத்தி விட்டோம்.கடந்த இதழில் இருந்தே கீழக்கரை நகராட்சிக்கும்,நமக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ கீழக்கரை நகராட்சியில் நடக்கும் உட்கட்சி பூசல்களுக்கு முழுக் காரணமான சேர்மனின் அண்ணன் இப்திஹார் ஹசனை கூப்பிட்டு கண்டிப்பதுடன் இனி வரும் காலங்களில் இது மாதிரியான சந்தி சிரிக்கும் விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கழக உடன்பிறப்புகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்துள்ளனர்.உடன் பிறப்புகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா? மாவட்டம்.

                                                     . பிரவீன் குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button