இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா,முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம்,குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார்,மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசுத்தொகைக்காண காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பாராட்டினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சா.புகாரி,மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன்,தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



