இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியம் போட்டி:கலெக்டர் துவக்கி வைத்தார்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டியை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நாள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள்,நல்வாழ்வு மற்றும் சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கமாக கொண்டுள்ளது.

இன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் மாற்றுதிறன் வகை வாரியாகவும்,10 வயதுக்கு கீழ்,11-18 வயது, 18 வயதுக்கு மேல் ஆகிய பிரிவுகளின்படி போட்டி நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகள் வரையும் ஓவியத்தில் சிறந்த ஓவியத்தை ஓவிய ஆசிரியர் 5 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுத்து அதன் விவரத்தை சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள்.இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றிபெறும் மாணவ,மாணவியர்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



