கீழக்கரை நகராட்சியில் பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க தடையா? உண்மையில் நடந்தது என்ன? புரிதல் இல்லாமல் புலம்பி தள்ளும் சமூக வலைதள செய்தியாளர்கள்!!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் நவ.27 அன்று சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஆகியோர் அனைத்து வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் தெரிவித்தனர்.

இதற்கு நகர் மன்ற கூட்டம் அரங்கிலேயே 1 – வது வார்டு கவுன்சிலர் பாதுஷா எதிர்ப்பு தெரிவித்தார்.அதற்கு விளக்கம் அளித்த துணை சேர்மன் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடப்பதை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சிலர் வீடியோ எடுத்து பகுதி பகுதியாக வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வருகின்றனர்.இது நகர் மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கிறது என்றார்.அதற்கு கவுன்சிலர் பாதுஷா அவ்வாறு வீடியோ எடுத்து முறையான அங்கீகாரம் இல்லாத சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுபவர்கள் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டியது தானே அதை விடுத்து வீடியோ எடுக்க கூடாது என்று சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கடுமையாக வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளர்கள் மட்டும் வீடியோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பணியாற்றும் செய்தியாளர்கள்தான்,அங்கீகரிக்கப்படாத வலைதளங்களிலும் பணியாற்றுகின்றனர்.பொதுவாக கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தை எல்லோரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.அது போக கீழக்கரையில் ஒரு சில முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வந்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களான முகநூல்,யூடியூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்வதாக அவ்வப்போது குற்றச்சாட்டு இருந்து வந்தது.அதன் பிரதிபலிப்பாகவே தாங்கள் பணியாற்றும் நாளிதழ்களுக்கு போட்டோ எடுத்துக் கொள்ளவும்,செய்திகள் சேகரிக்கவும் நகர்மன்ற கூட்ட அரங்கில் அனுமதி வழங்கப்பட்டது. இது தெரியாமல் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பத்திரிக்கையாளர்களை வீடியோ எடுக்க கூடாது என்பதாக தவறான தகவல்களை சித்தரித்து வருகின்றனர்.அவர்கள் வீடியோ எடுக்க கூடாது என்று சொன்னது பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் உள்ளே வந்து வீடியோ எடுத்து அதை நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக இருப்பவர்களிடம் கொடுத்து அங்கீகாரமற்ற வாட்ஸ் அப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் உண்மையில் கீழக்கரையில் உள்ள செய்தியாளர்களும் எந்த காட்சி ஊடகங்களிலும் பணிபுரியவில்லை.காட்சி ஊடகங்களில் பணியாற்றும் அதிகாரப்பூர்வ செய்தியாளர்களிடம் அந்தந்த செய்தி சேனலின் மைக் லோகோவை வாங்கி கொண்டு பந்தா காட்டி வருகின்றனர்.சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும்,நகர் மன்றத்தின் மாண்பை பேணி பாதுகாக்கவுமே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.அந்த புரிதல் கூட இல்லாமல் சமூக வலைதளங்களில் மட்டுமே முனைப்போடு செயல்படும் சிலர் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? செய்தி சேகரிக்க கட்டுப்பாடா என புலம்பித் தள்ளி வருகின்றனர்.நாமும் பத்திரிகையாளர் என்ற முறையிலும்,அந்த நகர்மன்ற கூட்டத்தில் சக செய்தியாளராக பங்கு பெற்றோம் என்ற முறையிலும் ஆணித்தரமாக சொல்கிறோம்.பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படவுமில்லை.செய்தி சேகரிக்க கட்டுப்பாடு விதிக்கப்படவுமில்லை.இதைச் சொன்னாலும் நம்ப என்னமோ கீழக்கரை நகராட்சிக்கு ஆதரவானவர் போல பேசுவார்கள்.உண்மையில் கீழக்கரை நகராட்சியை எதிர்த்து பலமுறை செய்தி வெளியிட்டதும் நான் ஒருவன் மட்டுமே.அதனால் உண்மையை மட்டும் சொல்வோம்.அதையும் உரக்கச் சொல்வோம்.மேலும் இனி வரும் காலங்களில் உள்ளூர் வலைதளங்கள் சார்ந்து வருபவர்களை நகர்மன்ற கூட்டத்தில் அனுமதிக்க கூடாது.அவ்வாறு அனுமதித்தால் பிரச்சினையை திசை திருப்பி பத்திரிகை சுதந்திரம் பறிபோனது என்று ஒட்டு மொத்த செய்தியாளர்களையும் இழிவுபடுத்தும் செயல் அரங்கேறும்.எனவே நாம் இறுதியாக கூற வருவது ஒன்றே ஒன்றுதான்.செய்தியாளர்களும் செய்தியாளர்கள் போல நடந்து கொள்ளுங்கள்.
கீழக்கரையை திவாலாக்கும் சமூக வலைதள செய்தியாளர்கள்!!!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியை அப்பட்டமாக மிரட்டும் தொனியில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்யும் வலைதள செய்தியாளர்கள் கீழக்கரை நகரில் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர்.இவர்கள் பொதுவான இடத்தில் வெளியில் வீடியோ எடுத்து பதிவு செய்து வந்ததாலும்,எதிர்மறையான விமர்சனம் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யாததாலும் இவ்வளவு நாள் வரை இவர்கள் வெளிவரவில்லை.தற்போது அரசுத்துறை குறித்து விவாதங்கள் நடைபெறும் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே வீடியோ பதிவு செய்து பதிவேற்றம் செய்ய துணிந்தது எப்படி என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.உண்மையில் சமூக வலைதளம் என்பது ஒரு போதும் ஊடகமாக முடியாது.ஆனால் முகநூலையும்,இணையதளத்தையும் ஊடகம் என்று நினைத்து கொண்டு இங்கு பலரும் பல்வேறு வகைகளில் அலப்பறையில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்மையில் கீழக்கரையில் உள்ள செய்தியாளர்கள் அனைவருமே அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள்தான்.ஆனால் தாங்கள் சார்ந்த அச்சு ஊடகங்களுக்கு மட்டும் செய்தி மற்றும் புகைப்படம் எடுக்கும் வரையில் தான்.மாறாக அச்சு ஊடகங்களில் பணியாற்றுவோர் வீடியோ பதிவு செய்யும் போது சமூகவலைதள செய்தியாளர்களாக்கப்படுகின்றனர்.பல்வேறு சர்ச்சைகளுக்கும்,பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாத கீழக்கரை நகர் மன்ற கூட்ட அரங்கிற்கு இது பொருந்தும்.மேலும் 1 – வது வார்டு கவுன்சிலர் பாதுஷா கூறியது போல் அங்கீகாரமற்ற சமூக வலைதளங்களில் நகர்மன்ற கூட்டத்தின் காணொலி பதிவிடப்படும் போது சேர்மன்,துணை சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகள் தாராளமாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம்.அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை உண்டு.



