உலக சிக்கன நாள் சேமிப்பின் அவசியம் குறித்த பதிவு

பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும்,சேமிப்பின் முக்கியத்துவத்ததையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி,எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து,வீட்டிற்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த “உலக சிக்கன நாள்” வலியுறுத்துகிறது.
வருவாயை உயர்த்தியும்,செலவுகளை களைந்தும் திறம்பட வாழ வேண்டும் என்பதை அய்யன் திருவள்ளுவர் “வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை” என்ற குறட்பா மூலம் “வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்” என்று கூறியுள்ளார்.
பண்டைய காலங்களில் மண் உண்டியல் மூலம் சேமிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. பாதுகாப்பற்ற அந்த முறையினின்றும் மாறி இன்று வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் சேமிக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளன.
இதன் மூலம் குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவுகளும் எளிதில் எதிர்கொள்ள முடிகிறது. “சிறுதுளி பெருவெள்ளம்” என்னும் பழமொழிக்கேற்ப, சிறுக சேமித்து வந்தால் நாளடைவில் அது பெரும் செல்வமாகும்.மேலும் தனிநபரின் நிதிநிலைத் தன்மையை அடையவும், நிதி நெருக்கடிகள் மற்றம் அவசர காலங்களில் நிதி சார்ந்து பாதுகாப்பாக இருக்கவும்,அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்பு கணக்கினைத் துவங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன்.
“செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்.



