இடி மின்னல் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
2025-ஆம்ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பொது மக்கள் எதிர்பாராத இடி மின்னல் போன்றவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் விழிப்புடன் இருக்கவும் இடிமின்னல் வரும் நேரங்களில் பொதுமக்கள் செயல்பட வேண்டியவை குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்படுகிறது.
இடிமின்னலின் போது பொதுமக்கள் செய்யக்கூடியவைகள்:–
பொதுமக்கள் வெளியே செல்வதற்கு முன் வானிலை எச்சரிக்கைகளை கவனமுடன் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக TN Alert மற்றும் sachet செயலிகளை தவறாது பதிவிறக்கம் செய்து அவற்றில் வரும் குறுந்தகவல்களை அறிந்துகொள்ளவேண்டும்.பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிலுள்ள ஜன்னல்களில் இருந்து விலகியிருக்க வேண்டும்.இடி மின்னல் நேரங்களில் தொலைக்காட்சி,மின்சாதனங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.பொதுமக்கள் இடிமின்னல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.பொதுமக்கள் மழைக் காலங்களில் இடியுடன் கூடிய மின்னல் வரும் நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்ல வேண்டும்.இடி மின்னல் நேரங்களில் மின்கம்பங்கள் மற்றும் ஆண்டெனாக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.இடி மின்னல்களில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தரையுடன் மிக குறைந்த தொடர்பு கொள்ளும் வகையில் குனிந்து காதுகளை மூடிக்கொண்டு உட்கார வேண்டும்.
இடிமின்னலின் போது பொதுமக்கள் செய்யக்கூடாதவை:-
பொதுமக்கள் இடி மின்னல் காலங்களில் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளை ஊர்ஜிதம் செய்யாமல் நம்பவோ பரப்பவோ வேண்டாம்.இடி மின்னல் நேரங்களில் இயலுமானவரை தங்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி பயன்படுத்த வேண்டாம்.இடிமின்னல் காலங்களில் திறந்த வெளியில் பாத்திரங்களை கழுவுவதோ,குளிக்கவோ வேண்டாம்.இடி மின்னல் காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.பொதுமக்கள் இடி மின்னல் காலங்களில் உயரமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அடியில் தஞ்சமடைய வேண்டாம்.குளம்,ஏரி மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வறிவுரைகளை தவறாது பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட இருந்திட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



