இளையான்குடி அருகே இளமனூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல்– 2 காவலர்கள் உட்பட 5 பேர் காயம்;பகுதி முழுவதும் பதற்றம்:ஒரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 பேர் மீது வழக்குப்பதிவு!!!

சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி அருகே அமைந்துள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது.
இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு சமூகத்தினர் சார்பில் “கிரிக்கெட் கிளப்”என்ற பெயரில் சமுதாய அடையாள பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து,அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தினர் இன்று அதற்கருகே தங்கள் சமுதாய அடையாள பலகையை நிறுவினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர் அந்த புதிய பலகையை அகற்றுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிலைமை மோசமடைந்து, இருதரப்பினரிடையே அடிதடி ஏற்பட்டது.
இந்த மோதலில் புதிதாக பலகை நிறுவிய சமூகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.மேலும் மோதலை தடுக்கச் சென்ற பழனி,முருகன்,கருணாகரன் எனும் இரண்டு காவல்துறையினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலையை கட்டுப்படுத்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எஸ்.பி.சிவப்பிரசாத் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தாசில்தார் முருகன்,கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை பரிசோதித்து வருகின்றனர்.
கூடுதல் தகவலாக, காயம் பட்ட சமூகத்தினர் “அருகிலுள்ள மற்றொரு சமூகத்தின் பலகையும் அகற்றப்பட வேண்டும் இல்லையெனில் நாங்கள் பட்டா நிலத்தில் வைத்துள்ள எங்கள் பலகையை அகற்றமாட்டோம்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் இளமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவுகிறது.எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதுகுறித்து இளையான்குடி காவல்துறையினரிடம் காயப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.மேலும் புகாரியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கூறி பரமக்குடி இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இளமனூர் அருகே கிராமத்தைச் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி .சிவபிரசாத் பேச்சு வார்த்தை நடத்த வரக்கூடிய நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை சாலை அருகே பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நபர்கள் திரண்டு தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2 அரசு பேருந்துகள் மற்றும் 3 கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனால் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் போராட்டத்தின் எதிரொலியாக ஒரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு தரப்பினரை சேர்ந்த 115 பேரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் கூறுகையில்:-

அரசு பேருந்து மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் மேலும் பலரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன இச்சம்பவம் தொடர்பாக சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செய்திகள் அல்லது பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நமது நிருபர்:தண்டாயுதபாணி.



