பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கும் செய்தித்துறை:நடவடிக்கை எடுக்க நாதியில்லாமல் தவிக்கும் பத்திரிகையாளர்கள்!!!

ஒரு பத்திரிகையாளன் சொந்தமாக ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது தற்போது மிகவும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.காரணம் தான் கஷ்டப்பட்டு நேர்மையாக ஒரு பத்திரிகையை சொந்தமாக நடத்த வேண்டும் என்பது அனைத்து பத்திரிகை துறையை சார்ந்த நிருபர்களுக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது.அதற்காக தாங்கள் சொந்தமாக ஒரு பத்திரிகை நாளிதழ்,மாத இதழ்,மாதம் இருமுறை இதழ்,வார இதழ் என ஏதோ ஒன்றை இந்திய அரசின் RNI மூலம் பதிவு செய்து அதை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இதற்கான அங்கீகாரமாக அரசு சார்பில் நாளிதழை தவிர்த்து மற்ற இதழ்களுக்கு பிரஸ் பாஸ் என்ற அரசு அடையாள அட்டையை வருடா வருடம் தலைமைச் செயலகத்தில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல நாளிதழ்களுக்கு அக்ரடேஷன் கார்ட் என அரசு அடையாள அட்டை வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.இதே போல மாவட்ட நிருபர்கள்,புகைப்பட கலைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த கலெக்டர் அலுவலகத்தின் மூலமாக இதேபோன்று அரசு அடையாள அட்டை வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க அரசு பதவி ஏற்ற பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவருக்கும் அரசு அடையாள அட்டைகள் கிடைத்து வந்தது.இந்த நிலையில் கடந்த அதாவது 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொடுக்கப்பட வேண்டிய அக்ரடேஷன் மற்றும் பிரஸ் பாஸ்ட் கார்டுகள் பல பத்திரிகை ஆசிரியர்களுக்கு கொடுக்காமல் அவர்களுக்கு இனி கார்டு வழங்க முடியாது என பி.ஆர்.ஓ செக்க்ஷன் மற்றும் செய்தி தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டனர்.இதனால் பல மாவட்டங்களில் மற்றும் சென்னை தலைமை செயலகத்திலும் கார்டு பெற்று வந்த பத்திரிகையாளர்களுக்கு அந்த அடையாள அட்டை நிறுத்தி வைக்கப்பட்டது.இதனால் கஷ்டப்பட்டு பத்திரிக்கையை பிரிண்ட் பண்ணி விநியோகித்து வந்த பல உண்மையான பத்திரிகையாளர்கள் இந்த அடையாள அட்டை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பல்வேறு பத்திரிக்கை அமைப்பினரும்,பத்திரிகையாளர்களும் செய்தி மற்றும் பத்திரிகை துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.முதல்வர் கவனத்திற்கும் பலர் இதை கொண்டு சென்றனர்.ஆனாலும் இதுவரை விடுபட்டவர்களுக்கு அதாவது தொடர்ந்து அரசு அடையாள அட்டையை பெற்று வந்தவர்களுக்கு இதுவரை தரவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
இந்த அடையாள அட்டையால் எந்த பத்திரிகையாளருக்கும் மிகப்பெரிய ஒரு சாதகமோ பெரிய அங்கீகாரமோ கிடையாது ஆனாலும் இந்த அடையாள அட்டை RNI பெற்று பத்திரிக்கையை தொடர்ந்து வெளியிடும் பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயமாகும்.அதனால் அவர்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் அந்த அடையாள அட்டையை மீண்டும் கொடுக்க வேண்டுமென பல மூத்த பத்திரிகையாளர்களும்,பல பத்திரிகையாளர் சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திராவிட மாடல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றி எப்போதும் போல தொடர்ந்து இவர்களுக்கான அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் நீதிமன்றத்திற்கு சென்று எங்களுக்கான உரிமையை மீண்டும் பெறுவோம் எங்களின் உரிமையை நாங்கள் கேட்கிறோம் அதை கண்டிப்பாக இந்த அரசு கொடுக்கும் என இந்த ஆண்டு எதிர்பார்க்கிறோம்.



