தவெகவின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு:சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!!!

2026 தேர்தலில் தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம் வழங்கி சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவெகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர் முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த அழைப்பை தற்போது தவெக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



