இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்:நிர்வாக அனுமதி ஆணை பெற்ற பயனாளி முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவற்றில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டமானது 14.03.2025 அன்று அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வீடும் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனடைய ஊராட்சி பகுதிகளில் 2000-2001 ஆம் ஆண்டு வரை பல்வேறு திட்டங்களில் வீடுகள் கட்டப்பட்டு தற்போது பழுது நீக்கம் செய்யமுடியாத நிலையில் உள்ள வீடுகள் தகுதியுடையதாகும்.
மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் RRH Survey என்ற தளத்தில் உள்ள பயனாளிகளை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மேற்கூறிய கணக்கெடுப்புகளில் இடம்பெறாத தகுதியான பயனாளிகள் இருந்தால் இக்குழு சரிபார்த்து கிராம சபையில் ஒப்புதல் பெற்று இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வீடு வழங்க தகுதியாக்கப்படும்.
இவ்வீடு குறைந்த பட்சம் 210 சதுர அடியாக (வீட்டின் பரப்பளவு மற்றும் சமையலறை உட்பட) கட்டப்பட வேண்டும். இவ்வீட்டிற்கான பட்டியல் தொகை ரூ.2.40 இலட்சம் நான்கு தவணைகளாக (தரைதளம், ஜன்னல் மட்டம், கூரை மேயப்பட்டது மற்றும் முடிவுற்ற நிலை) பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அரசிடமிருந்து நேரடியாக விடுவிக்கப்படும். MGNREGS திட்டத்தின் வீடு கட்ட 90 மனித சக்தி நாட்களுக்குரிய ஊதியம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 13 பயனாளிகளுக்கும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 43 பயனாளிகளுக்கும், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 54 பயனாளிகளுக்கும், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 18 பயனாளிகளுக்கும், முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 33 பயனாளிகளுக்கும், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 19 பயனாளிகளுக்கும்,
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 09 பயனாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 08 பயனாளிகளுக்கும், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 11 பயனாளிகளுக்கும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 10 பயனாளிகளுக்கும், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 45 பயனாளிகளுக்கும் என மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 263 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி பெற்ற பயனாளி சு.பாண்டீஸ்வரி சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தெரிவித்ததாவது:-
நான் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கட்டிவயல் ஊரட்சியில் வசித்து வருகின்றேன். நான் கூலி வேலை செய்து வருகின்றேன்.எனது கணவர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றார்.தினமும் எங்களுக்கு கிடைக்கும் கூலி வருமானத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கென்றிருந்த சொந்தமான வீடு முற்றிலும் சேதமடைந்து பழுது நீக்கம் செய்ய முடியாத நிலையில் இருந்தது.தற்போது முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டங்கள் குறித்து கேள்விப்பட்டு வீடு வேண்டி விண்ணப்பித்து இருந்தோம்.
எங்களுடைய விண்ணப்பத்தினை பரிசீலித்த அலுவலர்கள் என்னை நேரில் சந்தித்து விண்ணப்பத்தில் உள்ள தகவல் குறித்து விசாரித்ததுடன் எனக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி ஆணை வழங்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நிர்வாக அனுமதி ஆணை பெற்றேன்.
அதனைத்தொடர்ந்து இதன் மூலம் நான் எனது முற்றிலும் சேதமடைந்த வீட்டினை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி வருகின்றேன்.இந்த திட்டத்தை அறிவித்து என்னைப் போன்ற கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் செயலாற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



