இராமநாதபுரத்தில் அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் டாக்டர் மா.வள்ளலார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில்,பல்வேறு அரசு துறைகளின் மூலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்குவதன் விவரம் குறித்து ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சித்துறை, பேரூராட்சிகள் துறைகள் மூலம் அவ்வப்போது சாலைகளை கண்காணித்து உடனுக்குடன் சீரமைத்து கண்காணித்திட வேண்டும். மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் நியாயவிலைக்கடைகளிலிருந்து தாயுமானவர் திட்டத்தில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வரும் உணவுப்பொருட்கள் உரிய காலத்தில் செல்வதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் மழை காலத்தை கருத்தில் கொண்டு நகர்ப்பகுதிகள் முதல் கிராமப் பகுதிகள் வரை அனைத்து சாலைகள் மற்றும் பாலங்களை சரிசெய்திட வேண்டும். அதேபோல் பொதுப்பணித்துறையின் மூலம் வரத்துக்கால்வாய்களை சீரமைத்து வையைாற்றிலிருந்து வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு முழுமையாக சென்றிடும் வகையில் பணிகளை முன்கூட்டியே முடித்திட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, விளையாட்டுத்துறை, தமிழ்நாடு வடிகால் வாரியம், தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வணிக நிறுவனங்கள் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை ஆய்வு செய்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் டாக்டர் மா.வள்ளலார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சா.புகாரி,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



