இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உதவி மையம் செயல்படும்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 4 வாக்காளர் பதிவு அலுவலர்கள்,11 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்,நகராட்சி பகுதிகளில் கூடுதலாக நியமனம் செய்யப்பட்ட வட்டாட்சியர் நிலையிலான 4 கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் 1374 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இச்சிறப்பு தீவிர திருத்த பணியில் பணிபுரிந்து வருகின்றனர்.வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு,பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பூர்த்தி செய்வதற்காகவும்,பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறுவதற்காகவும்,இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (16.11.2025) உதவி மையம் செயல்படுகிறது.பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



